இலங்கையில் கடற்படை தளம் அமைக்கவில்லை’: சீனா

28.11.14

இலங்கையில் கடற்படை தளம் அமைக்கவில்லை, அது நீர்மூழ்கி கப்பலுக்கு தண்ணீர் நிரப்பும் வழக்கமான பயிற்சி தான் என்று சீனா கூறியுள்ளது.

சீன நீர்மூழ்கி கப்பல்
 இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று. இலங்கையில் கொழும்பு துறைமுகத்தை புதுப்பிக்க சீனா பெரிய அளவில் நிதியுதவி வழங்கியது. அதோடு ஹம்பன்தோதா என்ற இடத்தில் மற்றொரு துறைமுகத்தையும் சீனா கட்டி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை துறைமுகங்களில் சீனா நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தியது இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இலங்கையிடமும் இந்தியா கேள்வி எழுப்பியது.

சீனாவின் 18 தளங்கள்
 அதேசமயம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சீனா 18 கடற்படை தளங்களை இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் சில இடங்களில் இந்திய பெருங்கடலில் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தி நமீபியாவின் செய்தி பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதனை அடிப்படையாக வைத்து சீன பத்திரிகையும் இந்த செய்தியை வெளியிட்டது.
சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் யான்ஷெங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இதனை மறுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உண்மை இல்லை
 அந்த செய்தி முழுவதும் உண்மையான தகவல் அல்ல. சீனாவின் மக்கள் விடுதலை கடற்படை நீர்முழ்கி கப்பல்கள் தொழில் நுட்ப ரீதியாக 2 முறை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அது ஏதென்ஸ் வளைகுடாவில் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக சென்றபோது நடந்தது.
மீண்டும் தண்ணீரை நிரப்புவதற்காக இதுபோன்ற துறைமுகங்களில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்துவது வழக்கமான நடைமுறை தான்.

நமீபியா பத்திரிகை செய்தி குறித்து நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில், 2 வருடங்களுக்கு முன்பு ஒரு அதிகாரப்பூர்வமற்ற இணையதள செய்தி பத்திரிகையில் இந்த தகவல் வெளியானது தெரியவந்தது. அதனை மிகைப்படுத்தியும், திரித்தும் அந்த தகவல் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த செய்தி அப்பட்டமான அடிப்படை ஆதாரமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

அந்த எண்ணமும் இல்லை
 எந்த அடிப்படையில் சீனா வெளிநாடுகளில் ராணுவ தளங்களை அமைக்கிறது? என்று கேட்டதற்கு, ‘‘இப்போது சீன ராணுவம் எந்த வெளிநாட்டிலும் ராணுவ தளத்தை அமைக்கவில்லை. வெளிநாடுகளில் ராணுவ தளம் அமைக்கும் திட்டமும் இல்லை. விமானப்படை மற்றும் கடற்படையை நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தும் திட்டம் மட்டுமே உள்ளது’’ என்றார்.

0 கருத்துக்கள் :