கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல

9.11.14

‘தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டு விட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும்’ என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிததார்.

‘வெறுமனே எல்லாவிடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. மலையகத்தில் வந்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. இது ஒரு ஜனநாயக நாடு. அவர்களின் வருகையால் இங்கு நல்லது நடக்கும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்தை பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது எந்த உணர்வுடன் மலையக மக்கள் வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை செய்தார்களோ அதே மனிதாபிமான ரீதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரிய பெத்தை பகுதிக்கு விஜயம் செய்தார்கள். இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதை என்னால் தெளியாக கூற முடியும்.

தமிழத்; தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரியபெத்தைக்கு விஜயம் செய்தபோது நானும் அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களுக்கு அரசியல் ரீதியான அல்லது இந்த விஜயத்தில் வேறு எண்ணங்கள் இருந்தால் என்னையோ அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனையோ அழைக்காமல் சென்றிருக்கலாம்.

இதேவேளை, இவ்விஜயத்தின் போது எந்தவிதமான அரசியலையும் அவர்கள் பேசவில்லை.
எமது மறைந்த தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வடக்குக்கு தலைமைதாங்கி இருக்கின்றார். அவர் உயிருடன் இருக்கும் பொழுது அந்த மக்களுக்காக குறல் எழுப்பி இருக்கின்றார். எனவே அவ்வாறான ஒரு நெருங்கிய உறவு அவர்களுடன் எமக்கு இருந்தது.

எமது மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அமைச்சராக இருந்துகொண்டும் வட மாகபாண மக்களுடன் நல்ல ஒரு உறவை பேணிவந்தார்.

எனவே இனியாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும். இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளதோ அதேப்போல நாமும் எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ள பொழுது மற்றவர்கள் அலட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை’ எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

0 கருத்துக்கள் :