ஆட்சி மாற்றமே எமது நோக்கம்- மனோ கணேசன்

22.11.14

ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிரணி கூட்டு தலைமையில், ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் இருப்பது நமக்குள்ள குறைந்தபட்ச நம்பிக்கை ஆகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும்.

ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாசார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்.

இவையே தமிழ்பேசும் மக்களின் நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மாற்றத்திற்காக பல்வேறு காரணங்கள் கொண்டு எதிரணியில் இணைந்துள்ள அனைத்து சக்திகளும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க தயார் நிலையில் இல்லை, இது கசப்பானதாக இருந்தாலும் உண்மை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய இன, மதவாத ஆட்சியை மாற்றி ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த எதிரணி கூட்டை இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தியுள்ளோம்.

அதற்காக, இன்றைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எதிரணி ஆட்சி பீடம் ஏறினால் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்வுகளில் பாலுந்தேனும் உடனடியாக ஓடும் என நான் கூறவில்லை.

அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து நாம் ஏமாற தேவையில்லை. யதார்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். எமது முதல் நோக்கம் ஆட்சியை மாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :