எதிர்ப்புக்களையும் மீறி தலைவரின் பிறந்தநாள் ; வைகோ கைது

26.11.14

தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.


மதிமுக பொதுச்செயலர் வைகோ, கரூரில் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடிய மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும்  சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி, ஹெச். ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பிரபாகரனின் பிறந்த நாளை வைகோ கொண்டாடினால் அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 முதலே தமிழகத்தின் பல இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடந்தேறின.


சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக முன்னேற்றப் படை ஆகியவற்றின் சார்பில் நள்ளிரவில் 60 கிலோ கேக் வெட்டி, பட்டாசுகளை வெடித்து பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதைத் தடுக்கும் வகையில் ராயப்பேட்டையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


இதேபோல் இன்று காலை சென்னை சாந்தோமில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 60 கிலோ கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


கரூரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பிரபாகரன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தமிழீழம் ஒன்றுதான் தீர்வு; சார்க் மாநாட்டில் ராஜபக்ச மீண்டும் அதிபராக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.


இதேபோல் நாமக்கல்லில் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை கொண்டாட முயன்ற ம.தி.மு.க.வினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக மாநில செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் தலைமையில் இன்று காலை நாமக்கல் மணிக்கூண்டு முன்பு கூடிய, மதிமுகவினரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் திருப்பூரில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடிய மதிமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் பிரபாகரன் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.


பிரபாகரன் பிறந்த நாளில் புதுக்கோட்டையில் அகதி முகாமில் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த பொலிசார் தடை விதித்தனர். இந்தத் தடையை எதிர்த்துப் போராடியதால் பொலிசார் ஈழத் தமிழ் அகதிகள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

0 கருத்துக்கள் :