கொத்தமங்கலத்தில் பிரபாகரன் பதாகை அகற்றம்

26.11.14

கொத்தமங்கலத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் மற்றும் விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உணர்வாளர்களால் வைக்கப்பட்ட பதாகையை காவல் துறையினர் அகற்றினார்கள்.


 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று 26 ந் தேதியும் நாளை 27 ந் தேதி ஈழப் போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகளுக்காக மாவீரர் தினமும் உலகமெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்களால் கொண்டாப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர். இதே போல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொண்டாடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரபாகரன் படம் போடப்பட்டு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்த பதாகை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக கீரமங்கலம் போலிசார் அகற்றிவிட்டனர். இதே போல ஆலங்குடி, திருவரங்குளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாவீரர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் போலிசார் கிழித்து அகற்றியுள்ளனர்.


மேலும் வடகாடு பகுதி நாம் தமிழர் கட்சியினர் மாவீரர் தினம் கொண்டாட காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்ததை  காவல் துறையினர் வாங்க மறுத்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே போல தமிழகத்தில் பல இடங்களிலும் மாவீரர் தினம் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :