தமிழனுக்கு வீரம், விவேகம் இருக்கிறது. ஆனால் ஒற்றுமை இல்லை:வைகோ

21.11.14

திருச்சி திருவெறும்பூரில் வெள்ளிக்கிழமை(21.11.14) நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

தமிழகத்தை  தற்போது பேராபத்து சூழ்ந்துள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா 2 அணை கட்ட ஏற்பாடு செய்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு  கர்நாடக அரசு ஆண்டுதோறும் தரவேண்டிய 192 டிஎம்சி தண்ணீரை கொடுப்பதில்லை.

இதில் மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்டினால் 42  டிஎம்சி தண்ணீரை அவர்கள் தேக்கிக்கொள்வார்கள். ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்துக்கு வரும் தண்ணீரை தடுக்க முடியாது.

 ஆனால் இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கிறார்கள். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இப்படியே போனால் எத்தியோப்பியா  மாதிரி தமிழகம் பஞ்சநாடாக மாறும்.

காவிரி பிரச்னையை தற்போது கையில் எடுத்துள்ளேன். தமிழனுக்கு வீரம், விவேகம் இருக்கிறது. ஆனால் ஒற்றுமை இல்லை. கேரள மாநிலத்துக்கு பிரச்னை என்றால்  அங்குள்ள அனைத்து கட்சி எம்பிக்களும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர்.  தமிழகத்தில் ஒற்றுமை இல்லை.

 காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னைகளை  மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என வைகோ பேசினார்.

0 கருத்துக்கள் :