புலிகளிடமிருந்து காத்த மகனை இராணுவம் அழைத்துச் சென்றது

3.11.14

விடுதலைப் புலிகளிடமிருந்து எனது மகனை பாதுகாப்பதற்காக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், இராணுவம் எனது மகனை விசாரணைக்கென்று அழைத்து சென்றது.

இன்னமும்; விடுதலை செய்யவில்லை என முல்லைத்தீவு, உப்புமாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த கருப்பன் செல்லதுறை என்ற குடும்பஸ்தர், காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வுகள் நேற்றும், இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. இதன்போது தனது முறைப்பாட்டை பதிவு செய்யும் போதே, மேற்படி குடும்பஸ்தர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
எனது மகனுக்கு அப்போது 26 வயது. படிக்கின்ற காலத்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் எனது மகனை வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள்.

எனது மகனுக்கு அடிக்கடி சுகமில்லாமல் வரும். தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மகனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகள், மகனுக்கு அடிக்கடி வருத்தம் வருவதால் விட்டுவிட்டார்கள். கொஞ்ச காலம் மகன் எங்களுடன்தான் இருந்தார்.

எனவே, மகனை தொடர்ந்தும் முல்லைத்தீவில் இருந்தால் புலிகள் மீண்டும் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் 2005இல் நான் குடும்பத்துடன் மன்னாரிலுள்ள முருங்கன் பிரதேசத்திற்கு சென்றேன். அப்போது முருங்கனில் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட காலிமோட்ட முகாமில் வசித்து வந்தேன். அப்போது எங்களுடன் 100 குடும்பங்கள் வசித்து வந்தன.

கொஞ்ச காலம் முருங்கன் முகாமில் இருந்த நாங்கள் மீண்டும் முல்லைத்தீவுக்கு வரும்போது மகனை கூட்டிவந்தால் புலிகள் பிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மன்னாரிலேயே நண்பரின் வீடொன்றில் விட்டு விட்டு வந்தோம்.

அதன்பின்னர், 2009இல் இடம்பெற்ற யுத்தத்தினால் எங்களை செட்டிக்குளம், கதிர்காமநாதர் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது முருங்கனைச் சேர்ந்த எனது நண்பர் என்னைப் பார்ப்பதற்காக செட்டிக்குளம் கதிர்காமநாதர் முகாமுக்கு வந்தார். அப்போது மகன் எங்கே என்று கேட்டதற்கு 'உன்னுடைய மகனை 2008இல் இராணுவம் பிடிச்சுக்கொண்டு போய்விட்டது' என்று கூறினார்.

கடைக்குப் போவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற எனது மகனை மன்னாரிலுள்ள திசமகால தாழ்வு எனும் இராணுவ முகாமுக்குள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக நண்பர் கூறினார். குறித்த இராணுவ முகாமில் சென்று விசாரித்த போது அதுபற்ற தெரியாது என்று அலட்சியமாக பதிலளித்தார்கள்.

இதுபற்றி முருங்கன் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது, நாங்கள் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எமது முறைப்பாட்டை ஏற்பதற்கு மறுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறினார்கள்.

அதன்படி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது எனது மகன் முல்லைத்தீவில் இருக்கவில்லை என்பதால் முறைப்பாடு பதிவு செய்ய முடியாது என அவர்களும் கைவிரித்து விட்டார்கள்.

எனது மகன் பற்றி எதுவிதமான தகவல்களும் இதுவரையும் கிடைக்கவில்லை. மகன் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் என்னுடைய மனைவி, மகனின் பிரிவை தாங்க முடியாது இறந்து போனார்.

மகன் காணாமல் போனமை பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐ.எஸ்.ஆர்.சி உள்ளிட்ட அமைப்புக்களிடமும் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் முறையிட்டிருக்கிறேன்' என அவர் தொடர்ந்து கூறினார்.

0 கருத்துக்கள் :