மீரியபெத்த மண்சரிவின் உதவிகள் பெறுவது இடைத் தரகர்களா?

2.11.14

கொஸ்லாந்த அவலத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற உதவியில் 25 வீதம் சென்றடைந்தால் அதுவே அவர்களின் வாழ்க்கைக்கு போதுமானதாகும். ஆனால் அவ்வாறு செல்லுமா? என்பது இப்பொழுது இந்த மக்களுக்குள்ள கேள்வியாகும்.

நாடெங்கும் உள்ள மனித நேயங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வாரிவாரி வழங்குகின்றார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் யார் என்றால் கீழ் கண்டவாறு வரையறுக்கப்படலாம்.
1. பெற்றோர்களையும், உடைமைகளையும் இழந்த சிறுபிள்ளைகள்
2. உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்துக் கொண்டு இருப்பவர்கள்.
3. உடைமைகளை இழந்து உயிர் பிழைத்து வாழ வழியின்றி தவித்துக் கொண்டு இருப்பவர்கள்.
4. உடைமைகளையும், உயிர்களையும் பாதுகாத்தும் எதிர்காலத்தை சந்திக்க வழியில்லாதவர்கள். (அச்சத்தின் காரணமாக)
யார் பாதிக்கப்பட்டார்கள், பாதிக்கப்பட போகின்றார்கள் என்பதை இனம்காணல் மிக அவசியம். அவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்பொழுது உணர்ச்சி வசத்தால் நாட்டில் பல பாகங்களிலும் இருந்தும் ஏன் உலக நாடுகள் கூட மனித நேய உதவிகளை இம்மக்களுக்கு  வழங்குகின்றன.
இவ்வாறான நிவாரண உதவிகளை எடுத்து செல்லும் வழிகளிலே வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் அல்லது வசதியாக வாழ்ந்துக் கொண்டும் பிறர் உதவியை எதிர்பார்ப்பவர்கள் இம்மக்களின் பெயர்களில் இந்த உதவி நிவாரணங்களை பெற்றுக் கொள்ள போட்டி போட்டுக்கொண்டு நன்மை அடைவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் பலர் இந்த சம்பவங்களை முதலீடாக வைத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணம் சம்பாதிக்கும் தந்திரத்தை கையாளுவதாகவும் தெரியவருகின்றது.
அரசாங்கமும் சில அரசியல் தலைவர்களும் உண்மை நிலையை இருட்டடிப்பு செய்வதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இப்பொழுது இப்பகுதியில் மண்சரிவில் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் ( சிறுவர்கள் ) உயிர் பிழைத்த மக்களுடன் பயம் காரணமாக தஞ்சம் புகுந்த மக்கள், மண்சரிவு வந்து விடுமோ என்ற பயத்தில் தமது முக்கிய உடைமைகளுடனும், குடும்பத்தாருடனும் வெளியேறிய  மக்கள், மீரியபெத்த பகுதியை அண்டிய மக்கள் பெருந்தொகையான மக்கள், உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுடன் இரண்டர கலந்து விட்டனர்.

சிலர் இரவில் பாதுகாப்பு முகாமில் தங்கிவிட்டு காலையில் அவர்களின் சொந்த இடங்களை பார்த்து விட்டு 9 மணிக்கு முன்பதாகவே இந்த முகாம்களுக்க வந்து உதவிகளை பெற எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது.

அதிகாரிகள் அங்கு வந்து பார்க்கும் போது எல்லோரையும் பாதிக்கப்பட்டவர்கள் போல, பாதிக்கப்படாதவர்களுக்கும் உதவிகள் வழங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
எனவே மனித நேயம் கொண்ட நல் உள்ளங்கள் யாருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்று எண்ணி உதவுகின்றார்களோ அந்த உதவிகள் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்களுக்கே செல்லவேண்டும்.

அந்த அடிப்படையில் சிந்தித்து நாம் முன்பு கூறிய 4 பிரிவுகளை ஆராய்ந்து யாருக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து வழங்கினால், நிச்சயம் வழங்கப்படும் உதவிகளில் 25 வீதம் சென்றாலே உண்மையாக பாதிக்கப்பட்ட மக்கள் நன்மையடைந்து விடலாம்.

ஆனால் இடைத்தரகர்களும், அதிகாரிகளும், தலைமைகளின் அடியாட்களும் இந்த மனித நேய உதவிகள் சென்றடைய பிரச்சினையாக இருப்பார்களோ என்பது தான் தற்போழுது உள்ள கேள்வியாகும்?
உணர்ச்சிபூர்வமான உதவிகள் அனைத்தும் இறந்த நமது உறவுகள் கடைசியாக உயிர் பிழைக்க போட்ட அலறல் எவ்வாறு அடங்கிப்போனதோ, அதுபோல் நாம் உதவுகின்ற உதவிகள் மலைபோல் சென்று இவர்களையும் மூழ்கடிக்காது கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களின் எதிர்கால நிரந்தர வாழ்வுக்கு உதவ வேண்டி திட்டங்களை தீட்டி உதவுங்கள்.

இப்போதைக்கு அரசு இம்மக்களுக்கு  என்ன செய்ய போகின்றது என்பதை பொறுத்து உங்கள் உதவிகளை தராளமாக வழங்குவதே அம்மக்களுக்கு செய்யும் உண்மையான உதவியாகும்.
மகா
madhavan@hi2mail.com

0 கருத்துக்கள் :