பிரபாகரனை மீனவராக பார்க்கும் மகிந்த : திருமாவளவன்

8.11.14

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவார்கள் என்ற பயத்தால் 5 தமிழக  மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தமிழக மீனவர்களை மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தியுள்ளார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதற்கு ராஜபக்ச பொறுப்பல்ல, நரேந்திர மோடிதான் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை மீட்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் :-

 ‘‘இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பை கொடுத்திருக்கிறது. இந்த தீர்ப்ப்புக்கு எதிராக தமிழ்நாடே கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஆனால், மீனவ மக்களும், கடலோர மக்களுமே தீர்ப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
5 மீனவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டதா? போராட்ட எழுச்சியின் மூலமே நம் மீனவர்களை காக்க முடியும். அப்பாவி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ராஜபக்ச அரசுக்கு இன்னும் விடுதலை புலிகளின் மீதான அச்சம் இருப்பதை காட்டுகிறது.

ராஜபக்ச பிரபாகரனை போராளியாக மட்டுமல்ல, ஒரு மீனவனாகவும் பார்க்கிறார். மீனவர்களின் உதவியுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் எழுவார்கள் என்ற பயம் அவருக்கு உள்ளது. எனவேதான் இந்த தீர்ப்பின் மூலம் நம் மீனவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் மட்டுமல்ல, துணி வியாபாரம் செய்ய இலங்கை சென்றவர்கள், சிறு வியாபாரிகள் என பலர் மீதும் இலங்கை அரசு போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போட்டிருக்கிறது. இவ்வாறு வழக்கில் சிக்கிய பலர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை சிறைகளில் இருந்து வருகின்றனர்.
தூக்கு தண்டனை கைதிகளுடன் இவர்களையும் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு சர்வதேச சட்டத்தில் வழியுள்ளது. ஆனால் இந்திய அரசு இதனை கண்டு கொள்ளவில்லை.
விசாரணையின்றி சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பதற்கான கோப்புகள் தமிழக தலைமை செயலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. தூக்கு தண்டனை விவகாரத்தில் மேல்முறையீடு மட்டும் போதாது. உடனடியாக ராஜபக்சவை டெல்லிக்கு வரவழைத்து, மீனவர்களை விடுவிக்க சொல்ல வேண்டும்.

காந்தியை தேச தந்தையாக கொண்ட நாட்டில் அவரது கொள்கைகள் கடைபிடிக்கபடுவதில்லை. காந்தியின் கொள்கைக்கு நேர்மாறானவர் சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு சிலை எடுக்க நினைக்கும் மோடி அரசு எப்படி காந்தியின் கொள்கைகளை காப்பாற்றும்.

சிலைக்கு செலவு செய்யும் தொகையில் ஒரு சிறு தொகையினை செலவு செய்து நல்ல வழக்கறிஞரை இந்த வழக்கில் வாதாட வைத்திருக்கலாம். ஆனால் மோடி அரசு அதனை செய்யவில்லை. எனவே தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதற்கு ராஜபக்ச பொறுப்பல்ல, நரேந்திர மோடிதான் பொறுப்பு'' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள், மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் பெருமளவு பங்கேற்றனர்.

0 கருத்துக்கள் :