திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் 8 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை

1.11.14

எகிப்து நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச் சேர்க்கையாளர்களை நேரடியாக தண்டிக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை.

எனினும், இயற்கை நியதிக்கு மாறாக உறவு வைத்துக் கொள்ளுதல் போன்ற சட்டப் பிரிவுகளின்கீழ் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இங்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

சமீபத்தில், நைல் நதியின் மீது மிதக்கும் படகில் நடைபெற்ற ஒருவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்போது எகிப்தைச் சேர்ந்த 4 ஜோடி ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ காட்சி வெளியானது.

இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய போலீசார் 8 பேரை கைது செய்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இயற்கை நியதிக்கு மாறாக உறவு வைத்துக் கொண்டதாக போலீசாரால் குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறைவாசத்துக்குப் பிறகு மேலும் 3 ஆண்டுகள் அவர்கள் சீர்திருத்த பள்ளியில் தங்கியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரும் சமீபகாலமாகவோ, இதற்கு முன்னதாகவோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதற்கான மருத்துவ ரீதியான எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.

இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நீதிக்கு புறம்பானது என்று இங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

0 கருத்துக்கள் :