நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கு திருமணம் ஆகி விட்டதாக போகோ ஹரம் அறிவிப்பு

1.11.14

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14–ந்தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்.

தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவந்தவர்கள் போக மீதமுள்ள 219 மாணவிகளை 'செக்ஸ்' அடிமைகளாக விற்கப் போவதாக அந்த அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியுள்ளது. இந்நிலையில், நைஜீரிய அரசு கடந்த வாரம் தீவிரவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், போர் நிறுத்தத்துக்கு போகோ ஹரம் இயக்கத்தினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், கடத்தி வைத்துள்ள 219 மாணவிகளை விடுதலை செய்ய அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை மறுத்துள்ள போகோ ஹரம் இயக்கத்தின் தலைவனான அபூபக்கர் ஷேக்காவு நேற்றிரவு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டான்.
கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான விவகாரம் நெடுநாட்களுக்கு முன்னரே மறந்துப் போன விவகாரம் என்றும் அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதோ திருமணம் செய்து வைத்து விட்டேன் என்றும் அந்த வீடியோவில் சிரித்துக் கொண்டே கூறும் அபூபக்கர் ஷேக்காவு, ‘இந்தப் போரில் பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளான்.

0 கருத்துக்கள் :