வடக்கின் 1,960 பேருக்கு ஜனாதிபதி நகைகளைக் கையளிப்பார்

27.11.14

இறுதி யுத்த காலப்பகுதியில் புலிகளின் வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட நகைகள் மற்றும் இராணுவத்தினரால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் ஒரு தொகுதியை அதன் உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2379 நகை உரிமையாளர்களை இனங்கண்டுள்ள நிலையில் அதில் 1960 உரிமையாளர்களுக்கு எதிர்வரும் நான்காம் திகதி அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி நகைகளைக் கையளிப்பாரென பாதுகாப்பு மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட நகைகளின் உரிமையாளர்களைக் கண்டறிவதில் பல சிரமங்களை எதிர்நோக்கிய போதும், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட அனைத்து நகைகளினதும் உரிமையாளர்கள் இனங்காணப்பட்டு அவற்றைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இனங்காணப்பட்டுள்ள  2379 நகை உரிமையாளர்களில் 223 பேர் மன்னார் மாவட்டத்தையும்,  319 பேர் வவுனியா மாவட்டத்தையும்  45 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தையும், 1187 பேர் கிளிநொச்சி மாவட்டத்தையும், 186 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

இதேவேளை புலிகளின் வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்ட மற்றும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நகைகளின் உரிமையாளர்கள் கண்டறியப்படாவிட்டால் அவற்றினை அரச உடமையாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்

0 கருத்துக்கள் :