ஒரு வாரகால துக்கதின அனுஷ்டிப்புக்கு மனோ அழைப்பு

30.10.14

பதுளை - கொஸ்லாந்தை - மீரியபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு  அஞ்சலி செலுத்தும் முகமாக, எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டு, கறுப்பு நிற உடை அணிந்து, இன்று வியாழக்கிழமை 30ஆம் திகதி முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஷ்டிப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

இந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதேவேளை, துன்பத்தில் வீழ்ந்தவர்களுக்கு உதவிட தயாராவோம்.
நமது மக்களை காவு கொண்ட இயற்கை, மீட்புப் பணிகளையும் முன்னெடுக்க தடை போடுகிறது. மீட்புப் பணிகளிலே படைத்துறையினர் உட்பட இடர்நிவாரண பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த  மீட்புப் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெறவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறவும், அநாதரவானவர்கள் அடைக்கலம் பெறவும் எம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும், அனைத்து பேதங்களையும் புறந்தள்ளிவிட்டு வழங்க தயாராவோம்.
 
எமது உணர்வுகளை வெளிக்காட்ட எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும், வர்த்தக நிலையங்களிலும்  வெள்ளை கொடிகளை பறக்க விட்டு, கருப்பு நிற உடை அணிந்து இன்று வியாழக்கிழமை முதல் ஒரு வார காலத்தை, சோக வாரமாக அனுஸ்டிப்போம். அதேவேளை நிவாரண உதவிகள் பற்றிய தெளிவான கோரிக்கைகள் கிடைத்தவுடன், அந்த தேவைகளை வழங்க எங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.

0 கருத்துக்கள் :