புலிகள் இயக்க உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற கனடா ஆதரவளிக்கவில்லை!

31.10.14

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கனடா ஆதரவளித்து வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் ஸெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் தாயார் கனடா செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் ஒருங்கிணைக்க முயற்சித்த கஜீபனின் தாயாரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தடுத்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறவினர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றி வேறு நாடுகளில் தங்க வைக்க ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்து அடிப்படையற்றது என வைட்டிங் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
குறிப்பாக கனேடிய அதிகாரிகள் இவ்வாறு புலிகளின் உறவினர்களை பாதுகாப்பதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு எனவும், மக்களின் அரசியல் அபிலாஸைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் தாமும் கனேடிய அரசாங்கமும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், 2009ம் ஆண்டு யுத்த வெற்றியை கனடா சர்வதேச நாடுகளுடன் இணைந்து வரவேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீசா விண்ணப்பக் கோரிக்கைகள் மிகவும் நிதானமான முறையில் துல்லியமாக ஆராயப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் பாதுகாப்பு சட்டங்களின் அடிப்படையிலேயே வீசா வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறானவர்களுக்கு வழங்கப்பட்ட வீசா ரத்து செய்யப்படும் என வைட்டிங் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :