முதல் முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெறுகிறது

10.10.14

2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியர் உள்பட இருவர் பெறுகின்றனர். இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி, பாகிஸ்தானின் மலாலாவுக்கு நோபால் பரிசு அறிவிக்கப்பட்டுளளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நோபல் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. அமைதிக்கான நோபல் பரிசு டிசம்பர் 10ஆம் தேதி நார்வேயின் ஆஸ்லோவில் வழங்கப்படுகிறது.


குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப 1990 முதல் பாடுபட்டு வருபவர் கைலாஷ் சத்தியார்த்தி. பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வருகிறார். சுமார் 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்து மறுவாழ்வுக்கு உதவியுள்ளார். ஜெர்மனியும் இவரை கவுரவித்து விருது வழங்கியிருக்கிறது. கைலாஷ் சத்தியார்த்தி 1985, 1995, 2006, 2009 ஆண்டுகளில் அமெரிக்காவின் உயரிய விருதுகளை பெற்றவர். 60 வயதான அவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.


இதே போல், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா யூசப்சையி. பெண் கல்வியின் அவசியம் குறித்து இணையதள வலைப்பக்கத்தில் எழுதி வந்தார் மலாலா. பெண் கல்விக்காக போராடியதால், கடந்த 2012ம் ஆண்டு தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த அவர், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று திரும்பினார். பாகிஸ்தானில் முதன் முதலாக தேசிய இளைஞர் அமைதி பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. 12 ஜூலை 1997ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 17. மிக குறைந்த வயதில் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :