ஏமனில் முக்கிய துறைமுக நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

15.10.14

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. தலைநகர் சானாவை கடந்த மாதம் ஷியா கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். அதே நாளில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான ஐ.நா.வின் சமாதான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

 அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்துடன், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற ஷியா கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை, கனிந்து நனவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆட்சிக்கு புதிய தலைவரை (பிரதமரை) நியமித்தவுடன், கிளர்ச்சியாளர்கள் சானா நகரை ஆக்கிரமிப்பில் இருந்து விட்டு விட வேண்டும் என்பதே ஒப்பந்தம். இந்த நிலையில், புதிய பிரதமராக, தொழில் அதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அகமது அவாத் பின் முபாரக் (வயது 46) என்பவரை அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதி நியமித்தார். இந்த நியமனத்தை ஷியா கிளர்ச்சியாளர்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து தன்னை இந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அதிபர் ஹாதியிடம் முபாரக் கேட்டுக்கொண்டார். அதை அதிபரும் ஏற்றுக்கொண்டார்.இதற்கிடையே புதிய பிரதமர் நியமனத்தை நிராகரித்து, கிளர்ச்சியாளர்கள் போராட்டம் தொடங்கினர்.இந்த நிலையில் அதிபர் நேற்று  புதிய பிரதமராக ஐ.நா. தூதர் காலீத் பகாக்கை நியமித்தார்.இவரது நியமனம் நாட்டின் சிக்கலகளை தீர்க்க உதவும் என அதிபர் தெரிவித்தார்.

 இந்த நிலையில் ஷியா கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் உள்ள ஹூடிடா துறைமுக நகரை கைபற்றினர்.இது நாட்டின் 2 வது முக்கிய நகரமாகும்.சானா நகரில் இருந்து ஹூடிடா 226 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.ஹூடிடா நகரில் வான் மற்று கடல் பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பட்டில் வந்தது.ஹூடிடா நகரில் 20 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

 நகரில் உள்ள  நீதிமன்றத்தின் பாதுகாவலரை கொன்று நீதிமன்றத்தையும் கைப்பற்றினர். நகரின் முக்கிய சாலைகளில்  கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாக ராணுவ தரப்பிலும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும்  உறுதி படுத்தி உள்ளனர்.

0 கருத்துக்கள் :