மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்ய நடவடிக்கைகள்!

23.10.14

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பில் தகவல்களை வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.


அண்மையில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டது.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் சட்ட நிபுணர்களை கொண்டு மீண்டும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் வகையிலான மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்ல என்ற வகையில் விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் விவகாரத்தில் அரசின் மறைமுக பங்களிப்பு?
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தடை நீக்கத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் மறைமுக பங்களிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான பரபரப்புத் தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ரணில் விக்கிரமசிங்கவை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக சித்தரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான மறைமுக நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிக்குமாறு விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான செய்தியொன்று லங்காதீப பத்திரிகையில் இம்மாதம் 19ம் திகதி வெளியாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியும் பல்வேறு நாடுகளுக்கான விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சூழலை உருவாக்க ஏதுவாகும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். அதனை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அண்மைக்காலமாக வடக்கின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
மேலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் கே.பி. ஊடாக பதினாறு கப்பல்கள் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்திருந்தது. இதனைப் போன்று பன்மடங்கு அதிகமான பணம் மற்றும் சொத்துக்கள் ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டிருந்தது.

இவற்றைக் கைப்பற்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் விதித்த நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அதன் பிரகாரம் ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான அண்மைய தகவல்களை வழங்காமல் அரசாங்கம் நழுவல் போக்கைக் கடைப்பிடித்திருந்தது.

இந்த வழக்கில் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களை தருமாறு சில நாடுகள் அந்நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அவ்வாறான அறிக்கை வழங்கப்படவில்லை.

குறைந்த பட்சம் அண்மைக்காலத்தில் விடுதலைப்புலிகளை மீளக் கட்டியெழுப்ப முனைந்து கொல்லப்பட்ட அப்பன், கோபி சம்பவம், பாரிசில் இடம்பெற்ற கொலைச் சம்பவம், மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை தகர்க்க சதி செய்த வழக்கில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராசன், விடுதலைப் புலி உறுப்பினர்களின் கிரெடிட் கார்ட் மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தால் ஐரோப்பிய ஒன்றியத் தடை நீடிக்கப்பட்டிருக்கும்.

எனினும் விடுதலைப் புலிகளின் பெருந்தொகைப் பணத்துக்கு ஆசைப்பட்டு அரசாங்கம் அந்தத் தடையை நீக்குவதற்கு மறைமுகமாக உதவியளித்தது.

இதற்குப் பதிலாக மங்கள சமரவீர பாணியில் அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டிருக்குமானால் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பதனை உறுதிசெய்திருக்கலாம் என்றும் அந்த இணையத்தள செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :