மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுவாமி

21.10.14

இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்திய  பிரதர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்ச  பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கவுரவிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

மேலும், ''நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றும் அவர் கூறியுள்ளார்.
சுப்பிரமணியசாமி மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர்.சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.




தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய-மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவு படுத்துவதாக ஆகும்.


சுப்பிரமணியசாமியையும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தையும் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காக இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் சகோதரர் வை.கோ.வும், பா.ம.க தலைவர் ராமதாசும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பா.ஜ.க.வுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்கட்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து, விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :