கருணாநிதியை ஜீ.ஜீ. பொன்னம்பலம் காப்பாற்றியது போன்று ஜெயாவை!!??

11.10.14

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை பாதுகாப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம் செயற்பட்டதைப் போன்று, ஜெயலலிதா ஜெயராமை பாதுகாக்க ராம் ஜெத்மாலினி தவறி விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருணாநிதி எதிர்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழங்கிலிருந்து இலங்கையின் சட்டத்தரணியும் அனைத்திலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் காப்பாற்றியிருந்தார்.
இது தொடர்பில் குறித்த ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெயலலிதா ஜெயராம் முகம்கொடுத்துள்ள சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டை போன்று, கருணாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக சர்காரியா தலைமையிலான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இதில் இருந்து கருணாநிதியை மீட்க முடியாது என்று நிலைமை காணப்பட்டது.

எனினும் 1976ம் ஆண்டு அந்த நாட்களில் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆனந்தசங்கரியிடம், கருணாநிதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை கருணாநிதியின் சார்பாக வாதாடுவதற்கு கோரப்பட்டார்.
அந்தகாலப்பகுதியில் மலேசியாவில் தங்கி இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், இந்த கோரக்கையை ஆரம்பத்தில் நிராகரித்த போதும் பின்னர் ஏற்றுக்கொண்டார்.

அவர் சர்காரியா ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி வாதாடுவதை பார்வையிடுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சட்டத்தரணிகள் வந்திருந்தனர்.
சுமார் ஒரு மணித்தியாலங்களாக ஆணைக்குழுவின் முன்னால் வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம், கருணாநிதிக்கு எதிரான வழக்கை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வழி செய்தார்.

அதன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த வழக்கு நீர்த்துப் போனது.
இதற்கு பிரதி உபகாரமாக ஜீ.ஜீ. பொன்னம்பலத்துக்கு பாரிய பணத்தொகையை கருணாநிதி வழங்கிய போதும், அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமல் மலேசியாவுக்கு திரும்பி சென்றதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :