ஜெயிலில் ஜெயலலிதா இவருடன் 15–க்கும் மேற்பட்டோர் பலி

4.10.14

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதைக்கேட்ட அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் மாரடைப்பு மற்றும் தற்கொலைகளால் 15–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அறிஞர் அண்ணாவின் டிரைவரும் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அதுபற்றிய விபரம் :

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 84). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் கார் டிரைவராக இருந்து வந்துள்ளார்.

1968–ம் ஆண்டு வரை அண்ணாத்துரையிடம் பணியாற்றினார். அண்ணா மறைவுக்கு பின்னர் அரசு விரைவு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதற்கிடையே பணி காலத்தில் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார்.

பணி ஓய்வுக்கு பிறகு வீட்டில் இருந்து வந்த அவருக்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையும், அவருக்கு ஜாமீன் கிடைக்காததும் அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நாள் முதல் தனது வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இதனால் அவரது உடல் நிலை கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமானது. நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சஞ்சீவியின் உயிர் பிரிந்தது. இதனை தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மணிகண்டம் ஒன்றிய தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினரும் அஞ்சலி செலுத்தினர். அரியாவூர் தலைவர் சுந்தரம் சஞ்சீவியின் இறுதி சடங்கிற்குரிய அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுத்து கொண்டார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காத அதிர்ச்சியில் இறந்த சஞ்சீவிக்கு பஞ்சவர்ணம் (70) என்ற மனைவியும், கலையரசி (45) என்ற மகளும் உள்ளனர்.

0 கருத்துக்கள் :