வடக்கில் ரூ.100 மில்லியன் ஊழல்: சுரேஸ்

31.10.14

வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கூறியதாவது,
 'உலக வங்கியின் 3,500 மில்லியன் ரூபாய் உதவியில், நெல்சிப் திட்டத்தின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் வட மாகாணத்தில் 120 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பொறியியலாளர் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என உலக வங்கி கூறியிருந்தது. எனினும் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், நெல்சிப் திட்டத்தின் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பணிகளுக்காக  ஸ்டெயிலாநாதன் என்பவரை நியமித்துள்ளார்.

இந்த பொறியியலாளர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நிபுணத்துவ தகவல்களை வழங்கும் பொறுப்பை மாத்திரம் மேற்கொள்ள முடியும். இருந்தும், அவர் அதற்கு மேலதிகமாக ஒப்பந்தகாரர்களின் ஒப்பந்த சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், தனது தந்தை மற்றும் நண்பன் ஆகியோரின் பெயர்களில் ஸ்கைலொப் என்ற கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அந்நிறுவனத்தினூடாக பெரும்பாலான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார். மேலதிகமாக, ஐந்து வரையான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அவர் அனுமதியை வழங்கியுள்ளார்.

அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் மூலப்பொருட்களை பரிசோதிக்கும் அதிகாரியாக இருந்தவருக்கு, அந்த பணியை மேற்கொள்வதற்கான அனுமதியை அவர் வழங்கவில்லை. திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களின் ஜன்னல் கதவுகள் அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்ட போதிலும் அதற்கு 45 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டியுள்ளார்.

மேலும், மந்திகை சந்தையில் பொதுமக்கள் தறித்த 3 மரங்களை, தான் தறித்ததாக கூறி 6 இலட்சத்து 68 ஆயிரத்து 660 ரூபாய் கணக்கு காட்டியுள்ளார். இவ்வாறு பல ஊழல்கள் செய்து 100 மில்லியன் ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளார்.

இந்த ஊழல் நடவடிக்கையை கணக்காய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை ஆளுநர் பணி நீக்கம் செய்துள்ளார்.
ஊழல்கள் செய்ததில் உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் பங்குகள் இருக்கின்றன. அவர்களின் உதவிகள் இல்லாமல் செய்திருக்க முடியாது. அதிலும் பிரதம செயலாளருக்கு தெரியாமல் இவ்வாறானதொரு ஊழல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.

மேற்படி பொறியியலாளர் தான் செய்த ஊழல் மூலம் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியில் காணியொன்றை வாங்கி, அதில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய வீடு ஒன்றையும் நிர்மாணித்துள்ளார். அத்துடன், 5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் சொகுசு கார் மற்றும் மனைவியின் பெயரில் 5 மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.

இவரிடம் தற்போது 30 மில்லியன் ரூபாய் காணப்பட்டால், ஊழல் செய்யப்பட்ட மிகுதி 70 மில்லியன் ரூபாய் நிதியும் எங்கே என்பது தெரியவில்லை. இதன்மூலம் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் இந்த ஊழலில் பங்கு இருப்பது தெரியவருகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பொலிஸாருக்கு அனுமதி வழங்கி பொலிஸார் மூலம் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.  பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை அவர் கண்காணிக்க வேண்டும். மாறாக இவ்விடயம் மூடி மறைக்கப்பட்டால் ஆளுநருக்கும் இந்த ஊழலில் பங்கு இருப்பதாக நாங்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டி வரும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகள் புனரமைப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதில் பல வீதிகள் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் இருக்கின்றன. அதில் இவ்வாறு 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்தால் எவ்வாறு அபிவிருத்திகளை முன்னெடுப்பது. இவ்வாறு ஊழல் செய்யும் அதிகாரிகள் தமிழ் மக்களுக்கு வேண்டாம்.

உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் தகுதியற்றவர்கள் என்றும் அவர்களை மாற்றுமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவித்தும் ஆளுநர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை' என சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :