இந்தநாட்டில் இனரீதியாக வாக்களிப்பு நிலையங்கள் கிடையாது" -மனோ கணேசன

22.9.14

வெற்றிப்பெற்ற தமிழ் வேட்பாளர்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு மலையக மக்கள் அரசுக்கு மட்டுமே வாக்களித்துள்ளார்கள் என்பதை போன்ற ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுவது பொருத்தமானது அல்ல. இந்தநாட்டில் இனரீதியாக வாக்களிப்பு நிலையங்கள் கிடையாது. இனரீதியாக  வாக்காளர் பட்டியலும் கிடையாது. இனரீதியான வாக்குப்பெட்டிகளும் கிடையாது. ஆகவே அளிக்கப்பட விருப்பு வாக்குகளையும், தேர்தல் காலத்தில் அடிக்கும் அலையையும் வைத்தே நாம் தீர்மானிக்க முடியும்.

உண்மையில் எதிரணி, ஆளும் அணி ஆகிய இரண்டு தரப்புகளுக்கும் ஏறக்குறைய சரிசமமாகவே ஊவா மாகாணத்து தமிழ் மக்கள், அரசாங்கத்தின் பல்வேறு தேர்தல் கால சட்டமீறல்கள், கையூட்டுகள் மற்றும் அடாவடிகளுக்கு மத்தியிலும் வாக்களித்துள்ளார்கள் என்பதையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சி தலைமையகத்தில்,  ஜனநாயக இளைஞர் இணைய அங்கத்தவர்கள் மத்தியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
 
ஆளும் தரப்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களும், எதிர்தரப்பில் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்கு மேலதிகமாக 170,000 க்கும் மேல் விருப்பு வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவுக்கும், யானை சின்னத்துக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் ஒரு விருப்பு வாக்கை விரும்பி அளித்துள்ளார்கள். இந்த அரசுக்கு எதிரான ஹரின் பெர்னாண்டோவின் துணிச்சல் மற்றும் அவரது பாரம்பரியம் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய அவர் மீதான ஆதரவு அலையை அடிப்படையாக கொண்டு, தமிழ் வாக்காளார்கள் அவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கினார்கள்.

ஆளும் தரப்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களும், எதிர்தரப்பில் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால், வெற்றி பெறாதவர்களுக்கும் மக்கள் தங்கள் விருப்பு வாக்குகளை  அளித்துள்ளார்கள். ஆளுந்தரப்பில் ஆறு தமிழ் வேட்பாளர்களும் சுமார் 100,000  விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்கள். எதிர்தரப்பில் நான்கு தமிழ் வேட்பாளர்களும் சுமார் 60,000 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்கள். அத்துடன் யானை சின்னத்துக்கு வாக்களித்த தமிழ் வாக்காளர்கள், முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவுக்கும் ஒரு விருப்பு வாக்கை அளித்துள்ளார்கள்.
 
தேர்தல் காலத்தில் தமிழ் வேட்பாளர்கள் மத்தியில் அரசு தரப்பு வேட்பாளர்களால் ஆள்  பலம், பண பலம், அதிகார பலம், அரசாங்க வரப்பிரசாதங்கள் ஆகியவை அபரிதமாக பயன்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மைகள். அத்துடன் தேர்தல் பிரச்சார இறுதி தினத்தன்று பண்டாரவளையில் நடைபெற்ற, இன்றுவரை விளங்காத மர்மமாக திகழும், கோர விபத்தும் தேர்தலின் போக்கை கணிசமாக பாதித்தது.
 
எனது குடும்பத்தில் இடம்பெற்ற சோக சம்பவத்தையடுத்து கடைசி வாரத்திலேயே ஊவா தேர்தல் பிரச்சாரங்களில் என்னால் கலந்துகொள்ள முடிந்தது. தேர்தல் பிரச்சாரங்களின் போது மிகுந்த சவால்களுக்கு மத்தியிலேயே, ஐதேக தமிழ் வேட்பாளர்கள், ஆளும் தரப்பை எதிர்கொண்டனர் என்பதை என்னால் உறுதியிட்டு கூறமுடியும். இந்த பின்னணிகளின் மத்தியிலேயே  எதிரணிக்கு பதுளை மாவட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 
எதிரணி சார்பாக  வெற்றிபெற்ற ஐதேக வேட்பாளர்கள் புதிய தலைமுறை இளைஞர் உருத்திரதீபன் வேலாயுதம் மற்றும் மிகுந்த பிரயாசைகளுக்கு மத்தியில் போட்டியிட்ட எம். சச்சிதானந்தன், பி. லோகநாதன், பி. பூமிநாதன் ஆகியோருக்கும், அரசு தரப்பில் வெற்றி பெற்ற தமிழ் வேட்பாளர்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம். இந்த தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறாமையையிட்டு எமது வருத்தங்களையும் தெரிவித்து கொள்வோம்.

0 கருத்துக்கள் :