அமைச்சுப் பதவிகளை வகிக்கும் எங்களை விரோதிகளாகவே பார்க்கிறது அரசு - ஹக்கீம்

6.9.14

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்து அமைச்சுப் பதவிகளையும் வகிக்கும் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் விரோதிகளாக பார்க்கப்படும் நிலைமைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தேசியத்தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட கிளை திறப்பு விழா எம்.எஸ். தெளபீக் எம். பி தலைமையில் சின்னக்கிண்ணியாவில் கடந்த 03ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

அரசாங்கத்துக்கு வால்பிடிக்க, கூஜா தூக்க வேண்டுமென்றால் அதை என்னாலும் நன்றாகச் செய்ய முடியும். அப்படி நாம் நடந்தால் முஸ்லிம் காங்கிரஸ் சூடு, சுறனையற்ற கட்சி யென போராளிகள் எம்மைச்சாடுவார்கள் சாஸ்டாங்கமாக விழுந்து ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்ய வேண்டுமென்ற அவசியம் எமக்கில்லை. அந்த இழிநிலைக்கு எமது கட்சியின் போராளிகளை கொண்டு போய்விடும் கேவலத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் செய்யாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எப்பொழுதுமே உண்மையை எடுத்துக்கூறுவதற்கு தயங்குவதில்லை. நாம் வேறு யாருடைய தயவிலும் தங்கியில்லாத கட்சியென்பதனால் உண்மைகளை இடித்துரைக்க பயப்படுவதில்லை.

இன்று அட்டகாசமான மேலாதிக்கப்போக்கு ஆபத்தானது என்ற விடயத்தை அரசாங்கத்துக்கு எடுத்துக்கூற வேண்டியது அவசியமாகும். அதற்காக எங்களை விரோதிகளாகப்பார்க்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம். நாம் கூடவிருந்து குழிபறிக்கும் வேலையை பார்க்கமாட்டோமென கூறிக்கொள்கிறேன்.

யுத்தத்துக்குப் பின்னரான வித்தியாசமான கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அடுத்த கட்ட தேசிய மட்ட தேர்தல் வருகின்றபோது வேறு எந்தக்கட்சியும் எங்களைப்போல் கஷ்டப்படப்போவதில்லை. நாங்கள் எடுக்கும் முடிவுதான் ஒரு சிக்கலான முடிவாக இருக்கும். சந்தர்ப்பம் வருகின்ற போது முறையான பேச்சுவார்த்தையை நடாத்தி முடிவு எடுக்க வேண்டும். இதில் நாம் அவசரப்படுவதற்கு இடமில்லை. ஆனால், தற்பொழுது சில பேர் அவசரப்பட்டு அறிக்கை விடுகிறார்கள். எமது கட்சியில் பதவி வழியாக அந்தஸ்தில் உள்ளவர்கள், அதிகார வழியாக அந்தஸ்து வந்தவர்கள் இதுதான் மார்க்கம், இதுதான் வழியென இப்பொழுதே தீர்மானத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமை சரியான நேரம் வருகிற போது சரியான முடிவை எடுக்கும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, எதேச்சையாக அறிவிப்புக்களை செய்ய முனைவது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்.

கிழக்கு மாகாணத்தில் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் வெளிப்பாட்டை அம்பாறை மற்றும் சேருவில தொகுதிகளில் நேரடியாகவே காணலாம். வடக்கிலும் இவை கனதியாக மேற்கொள்ளப்படுகின்றன. அநீதிகள் நடைபெறுகின்ற போது அதை தட்டிக்கேட்கவில்லையாயின் முதுகெலும்பற்ற முஸ்லிம்காங்கிரஸ் என எமது கட்சியின் போராளிகள் எம்மை சாடுவார்கள்.
சிறு விடயங்களைக்கூட விட்டுக்கொடுக்காத அரசின் பிடிவாதப்போக்கினால் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் சீர்கெட்டு விடுமோ என மக்கள் அச்சம் கொள்கிறார்கள். எங்கள் மீது திணிக்கப்படும் பலாத்காரத்துக்கு எதிராக அல்லது மாறாக நடப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸினால் முடியவில்லையென்றால் நாங்கள் இந்த ஆட்சியின் பங்காளராக இருப்பதில் அர்த்தமில்லை.

இந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா? என எல்லோராலும் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் யாருடைய எடுப்பார் கை பிள்ளையுமில்லை, யாருக்கும் ஜென்ம விரோத கட்சியுமில்லையென்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் அபிலாசைகளை சுமந்து கொண்டிருக்கின்ற இயக்கமே முஸ்லிம் காங்கிரஸ் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திலிருந்து வெளியில் வரவும் எமக்குத்தெரியும். வெளியில் வரும்போது மற்றவர்களை படுகுழியில் தள்ளிவிட்டுவரவும் எமக்குத்தெரியும்.

முஸ்லிம் காங்கிரஸ் நிறைய சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்திருக்கிறது. கட்சியின் வீரியம் இன்னும் குன்றிப் போய்விடவில்லை. இக்கட்சியின் போராளிகள் ஆவேசமாகவும் ஆத்திரம் கொண்டவர்களாக காணப்படுகிறபோதும் தலைமைப்பீடம் தார்மீகமான தீர்க்க தரிசனத்துடன் முடிவு எடுக்கும் என பொறுமை காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எங்களுக்கு விடிவு வருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்னும் இயக்கம் சரியான வியூகம் வகுக்குமென அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் கட்சியின் கட்டுக்கோப்பை பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. ஒரு சிலர் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாது தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள். மாகாண அமைச்சர்கள் இக்கூட்டத்தில் இன்று கலந்து கொள்ளாதுள்ளனர்.

மெளலவி ஹஸன் அவர்களின் அனுதாபக்கூட்டத்தில் கூட கட்சியின் மாகாண அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இது மிகவும் வேதனை தரும் விடயமாகும். இத்தகையவர்களுக்கு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின் நிற்காது என்று இச்சந்தர்ப்பத்தில்கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :