முன்னாள் எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிப்பு

14.9.14

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி.க்கள் டெல்லியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும். அப்போது தான் அந்த வீடுகளை புதிய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு ஒதுக்க முடியும்.

தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கடந்த ஜூன் 26-ந் தேதியில் இருந்து முன்னாள் மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு அரசு வீடுகளை காலி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது. பலர் வீடுகளை காலி செய்யாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பலமுறை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியும் பலர் தங்களது வீடுகளை காலி செய்யவில்லை.

அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதிக்கெடு இந்த மாதம் 4-ந் தேதியுடன் முடிந்தது. அதன் பின்னரும் வீடுகளை காலி செய்யாததால், பாராளுமன்ற வீட்டுவசதி குழு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில் அரசு பங்களாக்களை காலி செய்யாத முன்னாள் மந்திரி மற்றும் எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி 5-ந் தேதியில் இருந்து ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்து மந்திரியும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவருமான அஜீத்சிங்குக்கு துக்ளக் ரோட்டில் 12-ம் எண் அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரும் அரசு பங்களாவை காலி செய்யாததால், இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் போலீசாருடன் சென்று வீட்டை காலி செய்யும்படி கூறினார்கள். ஆனால் அங்கு அஜீத்சிங் இல்லை.

 அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தபோது அஜீத் சிங்கின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று டெல்லி மாநகராட்சி அந்த வீட்டுக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டித்தது.

இதேபோல முன்னாள் எம்.பி.க்கள் முகமது அசாருதீன், ஜிதேந்திரசிங், நீரஜ் சேகர், கே.எஸ்.ராவ் உள்பட 30 எம்.பி.க்களின் வீடுகளில் குடிநீர், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் சிலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர். ஆனாலும் இன்னும் 15 பேர் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருக்கிறார்கள் என்று ஒரு அதிகாரி கூறினார்.

0 கருத்துக்கள் :