பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை

17.9.14

பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே.

இந்த அபிப்பிராயம் தெரிவிப்பதை பற்றி சிங்களப் பேரினவாதம் கோபித்தாலோ, அரசாங்கம் கோபித்தாலோ நான் பயப்படப்போவதில்லை.  ஏனென்றால், நான் இஸ்லாத்தை விசுவாசித்தவன் என்ற அடிப்படையில் உண்மையைக் கூற ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. இவ்விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி எனக்கு பழக்கமில்லை.

மேற்கூறிய இதேவிடயத்தைப் போல, இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்றுவரையும் இன்னும் எதிர்காலத்தில் ஆயிரம் வருடங்கள் போனாலும்,  என்றென்றும் மக்களால் மதிக்கப்படக்கூடிய ஒரேயொருவர் மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.
இதேவேளை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி,  மறுத்தாலும் சரி, மறைத்தாலும் சரி இன்னுமொரு கசப்பான உண்மையையும் இங்கு பகிரங்கமாக கூறியேயாக வேண்டும்.

சிங்கள பௌத்த மக்களுக்குள் இன்னும் உயிரோடு இருப்பவர்களில் இந்தக் கொடிய யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகூடிய செல்வாக்குடன் மக்கள் மனங்களில் அழியாத இடத்தைப் பிடித்தவர் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்க்ஷ என்பதை எவரும் மறுதலிக்கமுடியாது. கசப்பாயினும் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அரசாங்கத்தின் கைக்கூலியாக இருந்துகொண்டு பஷீர் சேகுதாவூத் இத்தகைய கருத்தை பரப்புகிறார் என்று எவர் கூறினாலும், அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. இந்த உண்மையை நான் பகிரங்கப்படுத்தியதற்காக நீங்கள் எனக்கு ஒரு வாக்குகேனும் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. 
இந்த அடிப்படை யதார்த்தங்களை இலங்கையில் வாழ்கின்ற எல்லா இன மக்களும் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. இறந்த பின்னர் இன்னமும் தமிழர்களுக்குள் அதிகூடிய செல்வாக்குச் செலுத்தும் தலைவர் பிரபாகரனே என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும்.

அதேபோல, மறைந்த பின்னரும் முஸ்லிம்களின் மனங்களில் மறையாமல் வாழும் மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பதையும்  சிங்களப் பெரும்பான்மையும் தமிழரும்   உணரவேண்டும்.
தேசிய ஐக்கியம் என்பது மூன்று இனங்களின் இணைவே. இதில் எள்ளளவேனும் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.  மூவினங்களின் மன நிலையும் கொள்கைகளும் ஒன்றாகப் பயணிப்பதே தேசிய ஐக்கியம். தேசிய ஐக்கியம் என்பது இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதிலேயே தங்கியுள்ளது.
வர இருக்கின்ற பெரிய அரசியல் மாற்றத்தை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்வதற்கும் அதை கடந்து செல்வதற்கும் தங்களை தயார்ப்படுத்தவேண்டும்.

தலைவர் அஷ்ரப் இருந்தபோது நாடு பிளவுபட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ. இனர் நாட்டின் எந்தப்பாகத்திலும் எந்தத் தாக்குதலையும் நடத்தக்கூடிய வல்லமை பெற்றிருந்தார்கள். தமிழ் மக்களின் தேசிய விடுதலைச் சின்னமாக விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் இருந்தார்கள்.
அப்பொழுது சிங்கள கடும் போக்குவாதம் மிகவும் பலவீனமாக இருந்தது. ஆகையினால், மிகவும் பலவீனப்பட்டுப்போயிருந்த சிங்கள, பௌத்த கடும்போக்குவாதத்தால் அரசாங்கத்துக்குள்ளே அதன் செல்வாக்கைச் செலுத்த முடிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகம் தன்னை விரைந்து தயார்ப்படுத்திக்கொண்டு தெளிவாக தனது அரசியல் பயணத்தை முற்கொண்டு செல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது. எனக்கு கட்சி அரசியலோ, நாடாளுமன்றக் கதிரையோ, அமைச்சுப் பதவியோ முக்கியமல்ல. நாட்டில் நிலவுகின்ற யதார்த்த நிலைமைகளைச் சொல்லி இந்த சமூகத்தை அறிவூட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்த தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :