விக்னேஸ்வரனை ஆயர்களிடம் குற்றம் சாட்டிய மஹிந்த: நோர்வேயிடம் முறையிட்ட ஆயர்

17.9.14

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லை என ஆயர்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியதாக, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் நோர்வே தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறேட் லோசனுக்கும், யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ். ஆயர்இல்லத்தில் இடம்பெற்றது.
 இதில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் ஆயர் தெரிவிக்கையில்,
ஆயர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்ற போது வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்று தாங்கள் வினவிய போது ஜனாதிபதி இவ்வாறு மறுப்பு தெரிவித்தார்.
அதாவது, அரசு, மாகாண சபையுடன் ஒத்துழைத்து செயற்படத் தயார் ஆனால் மாகாணசபைதான் அரசுடன் ஒத்துழைத்து செயற்படத் தயார் இல்லை என்றும் வடக்கு முதலமைச்சர் அரசுடனான கூட்டங்களுக்கு ஒழுங்கில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஆயர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பரிசுத்த பாப்பரசர் வடபகுதிக்கு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்று நோர்வேதூதுவர் வினவினார். அதற்கு பதிலளித்த ஆயர் பரிசுத்த பாப்பரசர் அரசியல் வாதியல்ல அவர் சமயவாதி அவர் வருகை தருவது சமய நடவடிக்கைக்காகவே ஆகவே நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :