பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல்

13.9.14

தமிழகத்தில் புகுந்து நாசவேலை செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது.
உளவாளிகள் கைது
 ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம், தமிழகத்தில் உளவு பார்க்க அனுப்பிய உளவாளிகள் தொடர்ந்து கைதான வண்ணம் உள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியில் தமீம் அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார்.
அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற பாகிஸ்தான் உளவாளி, தனது கூட்டாளிகள் சிவபாலன், சலீம், ரபீக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.
இவர்களுடன் தொடர்பு வைத்து செயல்பட்ட முகமது உசேன் என்ற உளவாளியை மலேசியாவில் கைது செய்தனர். அவரை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திடுக்கிடும் தகவல்
 தற்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல, இன்னொரு உளவாளி அருண்செல்வராசன் (வயது 29) என்பவரும், சென்னை சாலிகிராமத்தில் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்தான். இந்த பாகிஸ்தான் உளவாளிகளை, தமிழக கியூ பிரிவு போலீசாரும், தேசியபுலனாய்வு படை போலீசாரும் இணைந்து வேட்டை நடத்தி பிடித்துள்ளனர்.
உளவாளி அருண்செல்வராசனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
பாகிஸ்தானின்சதிவேலை
 கடல் வழியாக ஊடுருவி மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தினார்கள். அந்த தாக்குதல் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை விமானத்தை மோத வைத்து நடத்திய தாக்குதலைப்போல, உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மும்பையை அடுத்து, சென்னையில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையொட்டி தமிழக கடலோர பகுதிகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.
ஆனால் பாதுகாப்பு வளையத்தை மீறி பாகிஸ்தானின் சதி வேலைகள் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் உளவு நிறுவனம் தனது உளவாளிகளை தமிழகத்திற்குள், துணிச்சலாக ஊடுருவவிட்டுள்ளது. நல்லவேளையாக இந்த உளவு வேலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. 3 முக்கிய உளவாளிகள், தங்களது கூட்டாளிகள் 4 பேருடன் கைதாகி உள்ளனர்.
இலங்கையைதளமாக வைத்து...
தமிழகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர் இந்த உளவு வேலைக்கு தலைமை தாங்கி செயல்பட்டுள்ளனர்.
தமிழ் பேசக்கூடிய இலங்கையைச் சேர்ந்த இளம் வாலிபர்களை, தங்கள் உளவாளிகளாக தமிழகத்திற்குள் ஊடுருவ வைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்பு பணியாற்றிய இளைஞர்கள் சிலரையும் இதற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
விடுதலைப்புலியா?
தற்போது கைது செய்யப்பட்டுள்ள, அருண்செல்வராசன், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர் அதை மறுத்துள்ளார். அருண்செல்வராசனிடம் அது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தி தகர்க்கலாம் என்ற பட்டியலை பாகிஸ்தான் உளவு அமைப்பு தயார்படுத்திவிட்டது. முதலில் தமிழகத்தின் ராணுவ நிலைகள், அருகில் உள்ள ஆந்திரா, கேரளாவில் உள்ள ராணுவநிலைகள் மீது தாக்குதல் நடத்துவது என்று திட்டமிட்டுள்ளனர்.
ரூ.50 கோடி
 இந்த ராணுவ நிலைகளின் புகைப்படங்கள், எந்த வழியாக வந்து அவற்றின் மீது எப்படி தாக்குதல் நடத்துவது வசதியாக இருக்கும் என்பன போன்ற தகவல்களை வரை படம் மூலம் திரட்டி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள அருண்செல்வராசன், இணையதளம் வாயிலாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.
உளவாளிகளை தமிழகத்திற்கு அனுப்பி, இந்த உளவு வேலைக்கு பயன்படுத்திட மட்டும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ரூ.50 கோடி வரை செலவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
20 முக்கிய இடங்கள் தேர்வு
2-வது கட்டமாக தமிழகத்தின் பழங்கால கோவில்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள், சென்னையில் உள்ள தலைமைச்செயலகம், அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம், கல்பாக்கம் அணுமின்நிலையம், சென்டிரல் ரெயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை போன்ற 20 இடங்கள் தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அடுத்த கட்டமாக, தாக்குதலை தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இதற்குள் இந்த சதித்திட்டம் அம்பலமாகி, உளவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். உளவு வேலைக்கு தளபதியாக செயல்பட்ட, பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக்கை, பணி மாறுதல் செய்து விட்டனர். அவரை பாகிஸ்தான் அரசு திரும்ப அழைத்துக்கொண்டது. இதனால் இந்த நடவடிக்கைகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தயார்
 தமிழகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திட, 20 தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாகவும், தகவல்கள் வெளிவந்து உள்ளது. அந்த தீவிரவாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, பாகிஸ்தான் உளவு அமைப்பின் தாக்குதல் முயற்சிக்கு, ஓரளவு முட்டுக்கட்டை போட்டது போல ஆகிவிட்டது. ஆனாலும், தொடர்ந்து வேட்டை நடத்தி, இந்த தாக்குதல் முயற்சியை வேறோடு, வெட்டி சாய்க்க வேண்டும். அந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். 

0 கருத்துக்கள் :