பாகிஸ்தானுக்காக உளவு பணியில் ஈடுபட்ட இலங்கை தமிழர் கைது

11.9.14

பாகிஸ்தானுக்காக உளவுப்பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்தியாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அருண் செல்ராஜன் என்ற இலங்கையர், பாகிஸ்தானுக்கான உளவுப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இலங்கையர் கைது செய்யப்படும் போது அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் இருந்துள்ளன.
குறித்த இலங்கையர் எங்கே வைத்து கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் அவர் பல முக்கிய இடங்கள் குறித்து தகவல்களை சேகரித்தார் என்று இந்திய புலனாய்வு சேவை குற்றம் சுமத்தியுள்ளது.

இணையத்தள தொடர்பின் அடிப்படையில் செல்வராஜன் தகவல்களை பரிமாறியமை தொடர்பான சாட்சியங்கள், அவர் கைது செய்யப்பட்ட போது மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த சந்தேக நபருக்கு இலங்கையிலும் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவருக்கு உளவுப்பணிகளுக்காக கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகமே நிதிகளை வழங்கியுள்ளது.
முகாமைத்துவ நிறுவனம் ஒன்றின் நிகழ்வுக்காக 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்ற அருண், இந்தியாவின் பல துறைமுக காவல் பணிமனைகளுக்கும் அதிகாரிகளின் பயிற்சியகங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.

இந்தநிலையில் ஏற்கனவே பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீன் அன்சாரியுடன் அருண் தொடர்பு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
அன்சாரி, வெலிங்டன் இராணுவ முகாம், காரைக்கால், நாகப்பட்டிண துறைமுகங்கள் மல்லிப்பட்டிணம் கடற்படை முகாம் போன்றவற்றின் புகைப்படங்களை வெளிநாட்டவர் ஒருவருக்கு மின்னஞ்சலில் அனுப்பும் போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :