செல்வச் சந்நிதி ஆலயத்தில் 4 வயது மகளின் கழுத்தை நெரித்த தாய்

1.9.14

யாழ். செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தில் அர்ச்சனைப் பொருட்கள் விற்பனை செய்யும் பெண் தன்னுடைய 4 வயது மகளின் கழுத்தை நெரித்து கொண்டிருந்த போது, வல்வெட்டித்துறை நகரசபை பிரதித் தலைவர் மற்றும் ஆலயத்திலிருந்த பக்தர்களால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.

பண்ணாகத்தைச் சேர்ந்த ரூபி என்ற பெண் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தில் அர்ச்சனைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.
குறித்த பெண்ணுக்கு 2 சிறுவர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பெண் தனது 4 வயது சிறுமியை கீழேபோட்டு காலால் மிதித்துள்ளார்.
இதனை வல்வெட்டித்துறை நகர சபையின் பிரதி தலைவர் எஸ்.சதீஷ் மற்றும் ஆலயத்திலிருந்த பக்தர்கள் சிலர் நேரடியாக பார்த்த நிலையில், சிறுமியை மீட்டு வல்வெட்டித்துறை பொலிஸில் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அப் பெண்ணை இன்றைய தினம் மாலை விடுதலை செய்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட பெண்ணும் அவருடைய இரு பிள்ளைகளும் மீண்டும் ஆலயத்திற்கு வந்த நிலையில், அங்கிருந்த பக்தர்கள் மீண்டும் பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தினர்.
அதனையடுத்து மீண்டும் வந்த பொலிஸார் குறித்த பெண்ணையும் சிறுவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று வல்லை முனியப்பர் கோவிலில் விட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் காப்பாற்றப்பட்ட சிறுமி பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம், ஒப்படைக்கப்பட்டு பின்னரே பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
ஆனால் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேவேளை குறித்த பெண் இதே சிறுவர்கள் இருவரையும் கிணற்றில் வீசி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக, கைது செய்யப்பட்டு கடந்த மாதமே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பின், அவரிடமிருந்து சிறுவர்களை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் காப்பாற்றியிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :