இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மர்மமான முறையில் மரணம்

15.8.14

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்திலிருந்து இராணுவத்தில் இணந்து கொண்ட பெண் ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை உருவாக்கியிருக்கின்றது.
மேற்படி கிராமத்திலிருந்து கடந்த வைகாசி மாதம் 22ம் திகதி பிரசாத் அஜந்தா என்ற பெண் இராணுவத்தில் இணைந்துள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் உண்டானதாக தெரிவித்திருக்கும் இராணுவத்தினர், பின்னர் இவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்திருந்ததாகவும், அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

குறித்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் ஒட்டுசுட்டான்- செல்வபுரம் கிராமத்திலுள்ள அவருடைய கணவர் மற்றும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இராணுவ மரியாதைகளுடன் செல்வபுரம் கிராமத்திற்கு அருகிலுள்ள செல்வபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் நிறைவிலும், இவ்வருடத்தில் ஆரம்பத்திலும் இராணுவத்தில் பல பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பயிற்சியின்போது கடுமையான தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், உண்டாக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டும் உள்ளது. குறித்த சம்பவம் பெரும் சர்ச்சையினையும் உருவாக்கியுள்ளது.

0 கருத்துக்கள் :