அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமை!- கெஹலிய

1.8.14

அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்,  செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இன, மதச் சமூக அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
எவ்வாறு வாக்களிப்பது யாருக்கு வாக்களிப்பது என்பது வரையில் மக்களுக்கு அறிவுரை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

போர் இடம்பெற்ற காலத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட சில ஆயுதங்கள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டாம் என சில தூதுவர்கள் அந்தக் காலத்தில் கோரியிருந்தனர்.
இதன் காரணமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானங்களினால் எதேனும் ஓர் தரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அமெரிக்க அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுகின்றது எனவே அதன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :