தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து மோடிக்கு கவலையில்லை

7.8.14

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சித்தும் கவலைப்படுவதைக் காணோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர்; வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை  செய்யப்பட்ட அநீதியை மறைத்து, இலங்கை அரசுடன் இந்திய அரசு வர்த்தக, பொருளாதார உறவுப் பாலத்தை அமைக்கும் வேலைகள் வேகமாக நடக்கின்றன.

இலங்கைக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு நிதியையும் அறிவித்து, அதில் தமிழர்களுக்கும் உதவி கொடுக்கப்படும் என்ற மாய்மால வேலைக்கும் ஏற்பாடு நடக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில், தமிழர்களோடு இலங்கை அரசு  செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நிறைவேற்றியது கிடையாது. தமிழர்களை வதைத்து அடிமை இருளில் நசுக்கியது.
இலங்கை அரசு ஒருக்காலும் தமிழ் இன விரோதப் போக்கை மாற்றிக்கொள்ளாது என்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன், கொழும்பில் நடைபெற்ற சம்பவமே எடுத்துக்காட்டு.

உலகத்தில் எத்தனையோ இனங்கள் அழிவுகளையும் அவலங்களையும் அடக்கு முறையாளர்களால் அனுபவித்தபோதும், அதற்கெல்லாம் உரிய நீதியை பல்வேறு கட்டங்களில் அனைத்துலக நாடுகளும், ஐ.நா.மன்றமும் வழங்கி வந்துள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் நாதியற்றுப் போனார்களா? நானிலத்தில் அவர்களுக்கு நீதியே கிடையாதா? என்ற கேள்விகள் விஸ்;வரூபம் எடுக்கின்றன.

புண்ணுக்குப் புனுகு பூசி விடலாம், இலட்சக்கணக்கான தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்ததுபோல் நீதியும் புதைந்து போகட்டும், காலம் அனைத்தையும் மறக்கடித்து விடும் என்ற மனோநிலையில் இந்திய அரசின் போக்கு, குறிப்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் போக்கு அமைந்து இருக்கிறது என்று வைகோ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :