மகிந்தவின் ஆட்சியில் தமிழீழம் மலரும் : ஐ. தே. க

2.8.14

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்ச, நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழம் நோக்கிய பாதையில் பயணித்து கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டை இரண்டாக பிரித்து விடும், நாட்டை விற்று விடும் என்று அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையில் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிளவுபடுத்தாது. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஐக்கியப்படுத்தும் என்று பிரபாகரன் எண்ணினார்.

இதன் காரணமாகவே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதை பிரபாகரன் தடுத்தார்.

அதேபோல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழத்தை நோக்கி நாட்டை பிளவுபடுத்தும் பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றார்.

போரில் வென்றாலும் சர்வதேசத்துடன் பகை ஏற்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நாவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேரில் இருவர் இதற்கு முன்னரும் இவ்வாறான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள்.

இவர்கள் நாடுகளை பிளவுபடுத்தியுள்ளனர். அரசாங்கம் இந்த பிரச்சினைகளை உரிய முறையில் எதிர்கொள்ளாது நாடு பிளவுபட காரணமாகியுள்ளது. மகிந்த அரசாங்கமே நாட்டை பிளவுபடுத்துகிறது.

அதேபோல் மகிந்த அரசாங்கம் சீனாவுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் நாட்டை அபிவிருத்தி என்ற பெயரில் விற்பனை செய்துள்ளது.  இதனை ஐக்கிய தேசியக் கட்சி செய்யவில்லை எனவும் அஜித் மன்னப்பெரும கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :