'ராஜீவ் காந்தியின் வீட்டில் புலிகளின் உளவாளி'

5.8.14

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவாளியொருவர் இருந்தார் என ராஜீவின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான், தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானார்.

இந்நிலையில் அவரது முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான் 'மை இயர்ஸ் வித் ராஜீவ் அன்ட் சோனியா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலேயே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இரகசியமாக ஊடுருவி தஞ்சம் அடைந்தார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ராஜீவ் வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட போதிலும் இந்தக் கொலை தொடர்பான முழு உண்மை வெளிவராது என்று தான் நான் நினைக்கிறேன்.

பல தேசங்களில் உள்ள சக்திவாய்ந்த நபர்களின் சதி தான் ராஜீவ் கொலை என்பது என் கருத்து. ராஜீவ் வீட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் உளவாளிக்கு ராஜீவின் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள் முக்கிய தகவலை அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1991ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக அமேதியில் இருந்த சோனியாவும் என்னை போன்றே நினைக்கிறார். யாரோ ஒருவர் புலிகள் தரப்புக்கு இரகசிய தகவல்கள் அளித்ததாக அவரும் கருதுகிறார்.

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்திற்கு மட்டுமே விடுதலைப் புலிகளின் சதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ராஜீவ் காந்தியை கொலை செய்ய தயாரானபோது, விடுதலைப் புலிகள் தாங்கள் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம் என்று பிறரை நம்ப வைத்துவிட்டனர். இறுதியில் அவர்கள் தான் வென்றார்கள்.

எனது பார்வையில் இந்திய மத்திய உளவுத் துறையான ஐ.பி மற்றும் தமிழக ஆளுநர் பீஷ்ம நராயண் சிங் ஆகியோர் இந்த விடயத்தில் மத்திய அரசுக்கு தகவல்களைத் தெரிவிப்பதில் தோல்வி அடைந்துவிட்டனர் என்று அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி, இந்திய பிரதமராக இருக்கும் போது, ஆர்.டி.பிரதான், இந்திய மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் அவர் 1998ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை, சோனியா காந்தியின் அலுவலக பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :