அமெரிக்காவில் சீக்கிய வாலிபர் மீது இனவெறி தாக்குதல்

5.8.14

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கைச் சேர்ந்தவர் சந்தீப்சிங் (வயது 29). சீக்கியரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குயின்ஸ் பகுதியில் உள்ள ரோட்டோரம் தனது நண்பருடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது இடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தீப் சிங் இதுகுறித்து டிரைவரிடம் தட்டிக்கேட்டார்.

உடனே ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர், இனவெறியுடன் பேசியதோடு, லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து கிளப்ப முயன்றார். லாரியை செல்லவிடாமல் சந்தீப் சிங் அதன் முன்னால் நின்று மறியல் செய்தார். ஆனால் அந்த டிரைவர் லாரியை சந்தீப்சிங் மீது மோதியதோடு, அவரை 30 அடி தூரம் ரோட்டில் இழுத்துச்சென்றார்.

இதில் படுகாயம் அடைந்த சந்தீப்சிங் ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், சந்தீப் சிங் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கேட்டும் அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் சீக்கியர் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று சீக்கிய அமைப்பு சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

கடந்த 2012-ம் அண்டு ஆகஸ்டு 5-ந்தேதி அமெரிக்காவில் உள்ள ஓக் கிரீக் குர்டுவாராவில் நடந்த இனவெறி தாக்குதலில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையிலும் பேரணி நடத்தப்பட்டது.

0 கருத்துக்கள் :