பிரபாகரனின் மனஉறுதியை குறைவாக மதிப்பிட்டு விட்டேன் – நட்வர் சிங்

2.8.14

யாழ்ப்பாணத்தில், வைத்து தூக்கில் போடுவதற்காக, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வேண்டுகோள் விடுத்திருந்தார்.

1986ம் ஆண்டு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக, தகவல் வெளியிட்டுள்ளார் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங்.

நட்வர் சிங் தனது, 410 பக்க சுயசரிதை நூலில் இந்த விபரங்களை எழுதியுள்ளார்.
பெங்களூரில் 1986ம் ஆண்டு நடந்த சார்க் மாநாட்டிலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, தம்மிடம் ஒப்படைக்குமாறு ராஜீவ்காந்தியிடம், கோரிக்கை விடுத்திருந்தார் ஜேஆர். ஜெயவர்த்தன.

சிறிலங்கா இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக, ஜே.ஆர். ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்கு, பெங்களூர் வருமாறு பிரபாகரனை அப்போது புதுடெல்லி கேட்டிருந்தது.
பெங்களூரில் பிரபாகரன் தங்கியிருப்பதை நாம் இரகசியமாகவே வைத்திருந்தோம்.
ஆனால்,ஜே.ஆர். அதனை எப்படியோ தெரிந்து கொண்டார். என்றும் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.
“ராஜீவ் அவரை என்னிடம் ஒப்படையுங்கள், யாழ்ப்பாணத்தில் தமிழரான, மேயரைச் சுட்டுக்கொன்ற இடத்தில் வைத்து அவரைத் தூக்கிலிடுவேன்” என்று ஜேஆர் அப்போது தெரிவித்திருந்தார் என்றும், நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.

“பிரபாகரனுடனான சந்திப்பு, முழுமையாகப் பேச வேண்டிதையெல்லாம் பேசிய ஒரு அனுபவமாக இருந்தது.
இந்திய, சிறிலங்கா இராணுவங்களை ஒரு நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஒன்று வரக் கூடும் என்று அவருக்கு நான் கூறினேன்.
அவர் பிடிவாதமாக இருந்தார்.

அவரது பதில் எனக்கு மறைமுகமான அச்சுறுத்தலாகவே இருந்தது.
இதற்காக மரணத்தைத் தழுவினாலும்,கூட நான் ஈழத்தைக் கைவிட மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறினார்.
அந்த நேரத்தில், அவரது வெறித்தனமான உறுதிப்பாட்டின் ஆழத்தை, குறைவாக மதிப்பிட்டு விட்டேன்.
சில காரணங்களால், சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண ராஜீவ்காந்தி அவசரப்பட்டார்.
ஒருவேளை, பஞ்சாப், அசாம் பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாண்டதால் அவருக்கு அந்த நம்பிக்கை வந்திருக்கலாம்” என்றும் நட்வர்சிங் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :