எமது முதல்வரை இலங்கை கொச்சைப்படுத்துவதா? தமிழக அரசியல்வாதிகள் போர்க்கொடி

1.8.14

இலங்கை இராணுவ அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக சித்தரித்து புகைப்படம், கட்டுரை வெளியிட்டுள்ளமைக்கு இந்திய அரசியற் கட்சிகள் பல தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை இராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மனதால் நினைத்துக்கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றது.

அதுமட்டுமின்றி, ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களுக்கு என்ன பொருள்?’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன. இட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைத்த இலங்கை இராணுவம், தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள மாண்புமிகு ஜெயலலிதாவை இழிவு படுத்தத் துணிந்து இருக்கின்றது. இத்தகைய கேவலமான வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக முதல் அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதுவது வெறும் கடிதங்கள் அல்ல. இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகி, இன்னமும் இராணுவ முற்றுகைக்குள் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திறந்தவெளிச் சிறையில் வாடிக் கொண்டு இருக்கின்ற ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கவும் வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் தீட்டுகிறார். இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

ஏழரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கடிதங்கள் அவை.
நெருப்புக்குத் தன்னை இரையாக்கிய வீரத் தமிழ் இளைஞன் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழ் இளைஞர்களை எரித்த நெருப்பின் சீறல் அந்தக் கடிதங்கள்.

ஆனால், இலங்கை இராணுவ அமைச்சகத்திற்கு எத்தகைய மண்டைக் கொழுப்பும் ஆணவமும் இருந்தால், இந்திய அரசையும் தமிழக அரசையும் துச்சமாக நினைத்து தமிழக முதல்வர் மீது கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்யத் துணிவார்கள்? தமிழக முதலமைச்சரைக் கிள்ளுக்கீரையாக இலங்கை அரசு நினைப்பதற்கு யார் காரணம்? எவர் கொடுத்த துணிச்சல்?
வரலாற்றில் தமிழ்நாட்டையோ, தமிழக முதலமைச்சரையோ இந்த அளவுக்கு இழிவுபடுத்த உலகில் இதுவரை எவரும் துணிந்தது இல்லை. ஜெயலலிதா போடும் தாளத்திற்கு ஏற்ப பிரதமர் மோடி ஒருபோதும் ஆட மாட்டார். எனவே, ஜெயலலிதா எந்தவிதமான நியாயப்படுத்த முடியாத வெற்றுக் கூச்சல் எழுப்ப வேண்டாம் என்று திமிரோடு இலங்கை இராணுவ அமைச்சகம் கூறி இருக்கின்றது.
இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மீனவர் பிரச்சினை தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை தமிழக முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை? (How meaningful are Jayalalitha´s love letters to Narendra Modi?) என்று மிகக் கீழ்த்தரமான இரசனையுடன் அந்தக் கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை நினைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதைப் போல அக்கட்டுரையுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள படம் மனசாட்சி உள்ள அனைவரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான இலங்கை அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின் இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. பல முறை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. சிங்களப் படையினரின் இந்த செயலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் அவரது பங்கிற்கு இதுபற்றி பிரதமருக்கு இதுவரை 11 முறை கடிதம் எழுதியிருக்கிறார். முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள ஊடகங்கள் விமர்சித்தால் கூட அதை கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கலாம்.

ஆனால், இலங்கை அரசுத்துறை இணையத் தளத்தில், அதிலும் இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் சகோதரர் கோத்தபாய இராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாட்டின் முதலமைச்சரின் செயல்பாட்டை விமர்சித்து கண்ணியமற்ற மொழியில் கட்டுரை எழுதப்படுவது சரியா? இது இந்திய இறையாண்மையில் குறுக்கிடும் செயல் ஆகாதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினை உட்பட தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை முதல்வர் ஜெயலலிதா கையாளும் முறை தொடர்பாக எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. இன்னும் கேட்டால் ஜெயலலிதா அரசின் தவறுகளை, மற்ற கட்சிகளின் தலைவர்களைவிட நான் தான் மிக அதிகமாக விமர்சனம் செய்திருக்கிறேன். விமர்சனங்கள் ஒருவரின் தவறைச் சுட்டிக்காட்டி திருத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, இழிவுபடுத்தும் வகையில் இருக்கக் கூடாது. இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியை தங்களுக்கு நெருக்கமானராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான கட்டுரைகளும், கருத்துப்படங்களும் இலங்கை அரசு இணையதளத்திலும், ஊடகங்களிலும் வெளியாவது இது முதல்முறையல்ல. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பிறகு, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்புபடுத்தி மிகவும் மட்டமான ரசனையுடன் ‘லக்பிம’ என்ற ஊடகத்தில் கருத்துப்படம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

பாரதியஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் ராஜபக்ஷவின் விருந்தினர்களாக சென்று, இந்திய அரசின் ஏகபோக பிரதிநிதிகளைப் போன்று தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருவது தான், இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு இலங்கை அரசுக்கு துணிச்சலைத் தந்திருக்கிறது. இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மைக் கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

 மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :