குடிநீர் விற்பனைக்கு கண்டனம்: 2016ல் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும்

28.8.14

குடிநீர், நதிநீர் மற்றும் மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வரும் 31ஆம் தேதி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்த அக்கட்சி கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரி நதிநீர், தமிழக மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுக்காண கோரி சென்னையில் வரும் 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இந்த நாட்டில் ஏதேதோ இலவசமாக இருக்கிறது. ஆனால் நியாயமாக இருக்க வேண்டியது கல்வியும், மருத்துவமும்தான். உயிரும், அறிவும் விற்பனைக்கு வந்துவிட்டது என்றால் அந்த தேசம் உருப்படாது. குடிதண்ணீர் விற்பனைக்கு வந்துவிட்டது. உயிருக்கு ஆதாரமானது விற்பனைக்கு வந்துவிட்டது.


இந்தநிலையில் இதையெல்லாம் மாற்றுவதற்கு ஒரு மாற்று அரசியலை கட்டி எழுப்ப வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் நாம் தமிழர் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும். இவ்வாறு சீமான் கூறினார்.

0 கருத்துக்கள் :