அவுஸ்ரேலியா தப்பிச் செல்ல முயன்ற சிறிலங்காவின் அதிரடிப்படை கொமாண்டோ

9.7.14

கொகோஸ் தீவுக்கு அருகே அவுஸ்ரேலிய எல்லைக்காவல் படையினரால் தடுக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட 41 அகதிகளில், ஒருவர் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட 41 அகதிகளும், நேற்று காலி நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்ட போதே, அவர்களுள் 30 வயதான மகேஸ் இந்திக என்ற சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோவும் உள்ளடங்கியிருந்தார்.

அவர், இரண்டாவது சந்தேகநபராக எப்பா அனுரசாந்த என்ற சட்டவாளரால், பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் தனது 4 வாரக் குழந்தை மற்றும் மனைவியுடன் இந்தப் படகில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அரசியல் பிரச்சினை காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக இந்திகவின் மனைவி கூறியுள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்குச் செல்வது தமது இலக்கு அல்லவென்றும், நியூசிலாந்து செல்லவே பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு வாரப் பயணத்தின் பின்னர், அதனைத் தொடர முடியாது என்பதால் நியூசிலாந்து அரசாங்கத்திடம் தம்மைப் பொறுப்பேற்குமாறு செய்மதி தொலைபேசி மூலம் உதவி கோரியதாகவும், வெகு தொலைவில் இருப்பதால் தம்மால் உதவ முடியாது என்று அவர்கள் கூறிவிட்ட நிலையில், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே இருந்ததால், வேறு வழியின்றி, அவுஸ்ரேலியாவின் உதவியைக் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொனி பிராட் என்பவரைக் கப்டனாக கொண்ட கப்பலில் தாம் ஏற்றப்பட்டதாகவும் கூறிய அந்தப் பெண், மூன்று நான்கு நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். }
கப்பலில் வளர்க்கப்பட்ட நாயை விடவும், தாம் மோசமாக நடத்தப்பட்டதாகவும், திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கூறினர்.

இவர்கள் அனைவரும், கப்பலில் வைத்தே வீடியோ கலந்துரையாடல் மூலம் அவுஸ்ரேலிய அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 கருத்துக்கள் :