கோத்தபாய மீதான தாக்குதலுக்கு முன்னர் ஒத்திகை நடத்திய புலிகள்

9.7.14

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், இரணைமடு பிரதேசத்தில் ஒத்திகை நடத்தப்பட்டதாக புலிகளின் உறுப்பினர் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரிடம் கூறியுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், இரணைமடு பிரதேசத்தில் நான்கு நாய்களை பயன்படுத்தி தாக்குதலுக்கான ஒத்திகை நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கூறியுள்ளார்.
பழைய கார் ஒன்றுக்கு பின்னால், வெள்ளை துணியொன்றை விரித்து குண்டு பரீட்சித்ததாகவும் அதன் பின்னர் வெள்ளை துணியில் 200 ஓட்டைகள் காணப்பட்டதுடன் ஒத்திகைக்கு பயன்படுத்திய நான்கு நாய்களில் மூன்று நாய்கள் இறந்து போனதாகவும் கபிலன் என்ற செல்லத்துரை நந்தகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவை கொலை செய்ய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தயாராகி வருதை அறிந்தும் அது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் செல்லத்துரை நந்தகுமார் கைது செய்யப்பட்டார்.

0 கருத்துக்கள் :