யாழ்ப்பாணம் செல்கிறார் சிறில் ரமபோசா

3.7.14

சிறிலங்காவில் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்காக தென்னாபிரிக்க பதில் அதிபர் சிறில் ரமபோசா வரும் 6ம் நாள்  – திங்கட்கிழமை சிறிலங்கா வரவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பான, ஆரம்பக்கட்ட பேச்சுக்களை நடத்துவதற்காக, வரவுள்ள சிறில் ரமபோசாவுடன், மூன்று பேர் கொண்டு குழுவொன்றும் கொழும்பு வரவுள்ளது.

இந்தக் குழுவில், தென்னாபிரிக்காவின் பிரதி அமைச்சர் ஒபெய்ட் பொபியேலா, பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இப்ராகிம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஐவர் ஜெனிங்ஸ் ஆகியோரும் இடம்பெறவுள்ளனர் .

இந்தக் குழுவினர், வரும் 8ம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவதற்காகவும், வடக்கிலுள்ள நிலவரங்களை நேரில் அறிந்து கொள்வதற்காகவும், எதிர்வரும் 8ம் நாள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ரமபோசா தலைமையிலான குழுவினர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இதற்கிடையே, தென்னாபிரிக்க பதில் அதிபர், சிறில் ரமபோசா நேற்று முன்தினம் நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நோர்வே பிரதமர், தென்னாபிரிக்கா சென்றுள்ள நிலையில், அங்குள்ள யூனியன் கட்டடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்கு ரமபோசா பயணம் செய்யவுள்ள நிலையில், முன்னர், சிறிலங்கா அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வேயின் பிரதமர் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளது கவனத்துக்குரிய விடயமாகும்.

0 கருத்துக்கள் :