கோத்தபாயவின் உதவியுடன் இராணுவ தலைமையகம் அமைப்பதற்கு காணி சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்பினால் ஏமாற்றம்

22.7.14
யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இராணுவத்தினரால் காணி அபகரிப்புக்காக முயற்சி செய்த வேளை பொதுமக்களின் போராட்டத்தினால் அம் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
யாழ்.தென்மராட்சி- எழுதுமட்டுவாள் பகுதியில் தம்பிராசா மகேஷ்வரி என்பவருக்குச் சொந்தமான 50ஏக்கர் நிலத்தை இலங்கை இராணுவத்தின் 52வது படையணி தலமையகம் அமைப்பதற்காக சுவீகரிப்புச் செய்வதற்கு அளவீடு செய்ய நில அளவையாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இன்றைய தினம் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 50ஏக்கர் நிலத்தில் இலங்கை இராணுவத்தின் 52வது படைத்தலமையகம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த படைமுகாம் அமைக்கப்பட்ட பொழுது அந்த நிலத்தை தாம் விலைக்கு வாங்கிவிட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபகஷ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த நிலம் தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் 2 வருடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த படையினர் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் இந்தக் காணிக்குள் செல்வதற்கு காணி உரிமையாளருக்கு அனுமதி மறுத்திருந்தனர்.
இதேவேளை படையினரின் இந் நடவடிக்கையினை எதிர்த்து காணி உரிமையாளர்கள் பல இடங்களில் முறைப்பாடு தெரிவித்திருந்த போதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் படையினரின் தேவைக்காக குறித்த காணியை சுவீகரிக்கப் போவதாக நில அளவையாளர்கள் மூலம் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணியை இன்றைய தினம் அளவீடு செய்யப் போவதாகவும் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்றைய தினம் காலை 9மணிக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அப்பகுதியில் கூடியிருந்த நிலையில் 9.30மணிக்கு நில அளவையாளர்கள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர்.
இதனையடுத்து மக்களும் அரசியல் தலைவர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலமையினை சீர்செய்ய முனைந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் காலை 11.45 மணியளவில் நில அளவையாளர்கள் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கையினை கைவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் குறித்த காணியை விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு காணி உரிமையாளர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் யாழ்.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அருகில் காணி உரிமையாளர் அழைக்கப்பட்டு அவரிடம் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.
இதேபோல் மேற்படி தம்பிராசா மகேஷ்வரிக்குச் சொந்தமான காணி 50 ஏக்கர்களாகும்,  எனினும் சுவீகரிப்பு பிரசுரத்தில் 40ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் குறித்த காணியை தன்னுடைய 5 பெண் பிள்ளைகளுக்கும், 3 பேரப்பிள்ளைகளுக்கும் சீதணமாக வழங்கி விட்டதால், தன்னிடம் அந்தச் சொத்து ஒன்று மட்டுமே இருப்பதாகவும் கூறி காணி உரிமையாளர் இன்றைய தினம் கதறியழுது நியாயம் கேட்டுள்ளார்.0 கருத்துக்கள் :