தடுத்து நிறுத்த வேண்டும் – சிறிலங்காவுக்கு மூன்று ஐ.நா சிறப்பு நிபுணர்கள் கோரிக்கை

3.7.14

கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை மேற்கொள்ளப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூன்று சிறப்புப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.நாவின் மதச் சுதந்திரத்துக்கான சிறப்புப் பிரதிநிதி ஹெய்னர் பிலேபெல்ட் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி ரிட்டா இசக், நீதிக்குப் புறம்பான மரணதண்டனை தொடர்பான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் ஆகியோர் இணைந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அண்மையில் சிறிலங்காவின் தென் பகுதியில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து, ஐ.நா தரப்பில் இருந்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான செய்தியாக இது அமைந்துள்ளது.

இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்காயில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களில் குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்த நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் 15ஆம் நாள் கடும்போக்கு சிங்கள தேசியவாதக் குழுவான பொது பல சேனா, அழுத்கமவில் மிகப் பெரிய பேரணியை நடத்தியதன் காரணமாக, இனக்கலவரங்கள் நடந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 80 பேருக்கும் மேல் காயமடைந்தனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் சில இடங்களில் பள்ளிவாசல்களும் சூறையாடப்பட்டன என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றம் செய்து விட்டுத் தப்பிவிடலாம் என்ற சிறிலங்காச் சூழலே வன்முறையைத் தூண்டுகிறது என ஐ.நாவின் மதச் சுதந்திரத்துக்கான சிறப்புப் பிரதிநிதி ஹெய்னர் பிலேபெல்ட் குறிப்பிட்டுள்ளார்.
பொது பல சேனா தவிர சிங்கள ராவய, ஹெல பொது பொவுர ஆகிய குழுக்களும் சிறிலங்காவில் கடும்போக்கு பார்வையைக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை மதத்தவரால் புத்தர் சிலைகள் தகர்க்கப்படுவதாகவும் கிறிஸ்தவர்கள் இளைஞர்களையும் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து வருவதாகவும் இந்தக் குழுக்கள் உள்ளூர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதேபோல, சிங்கள மக்களை அழிப்பதற்காகவும் சந்ததிகள் வளர்வதைத் தடுப்பதற்காகவும் போதைப் பொருட்களையும் கருத்தடுப்பு மாத்திரைகளையும் முஸ்லிம்கள் கடத்தி வருவதாகவும் இக்குழுக்கள் கூறிவருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதிரியான கருத்துக்கள், சிறிலங்காவில் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள பௌத்தர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சிறுபான்மையினர் மீது விரோத உணர்ச்சியையும் வளர்க்கின்றன என ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :