பாக்கு நீரிணையில் எல்லைக் கல் நாட்டியது இந்தியா

5.7.14

பாக்கு நீரிணையில், இந்தியா கடல் எல்லையை மீனவர்கள் மீறிச் செல்லாமல் இருப்பதற்கு உதவியாக, ஐந்தாவது மணல் திட்டுப் பகுதியில், இந்தியா என்ற எல்லை அடையாளப் பலகை நாட்டப்பட்டுள்ளது.
மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து,மூன்று இலட்சம் ரூபா செலவில், 3.9 மீற்றர் நீளமும், 2.5 மீற்றர் அகலமும் கொண்ட கொங்கிறீட் பலகை அமைக்கப்பட்டுள்ளதாக, மண்டபத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படை, தெரிவித்துள்ளது.

இந்தப் பலகையில், இந்தியா என்று தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், ஆகிய மொழிகளில், சிவப்பு மையினால் எழுதப்பட்டுள்ளதாகவும், இதனை தொலைவில் இருந்தே பார்க்க முடியும் என்பதால், மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் இந்தியக் கடலாரக்காவல்படை தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்த எல்லை அடையாளப் பலகையால் தமக்கு எந்த பயனும் இல்லை என்றும் அந்தப் பகுதியில் மீன்பிடிக்கத் தாம் செல்வதில்லை என்றும் தமிழ்நாடு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலகை நாட்டப்பட்டுள்ள மணல்திட்டு, ஆழம் குறைவான பகுதி என்றும், அதற்கு அருகில் தாம் செல்வதில்லை என்றும், அந்தப் பகுதியில் இருந்து ஒன்று அல்லது ஒன்றரை கடல் மைலுக்கு அப்பாலேயே தாம் மீன்பிடிக்கச் செல்வதாகவும், மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :