ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையா? அரியநேத்திரன் கேள்வி

30.7.14

ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மிக முக்கியம் ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை ஜனநாயக நாடு என்று கூறும் இந்த அரசாங்கம் வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை அடக்கியாள நினைப்பது எந்த வகையில் பொருந்தும் என கேள்வி எழுப்புகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.
அண்மையில் யாழ்ப்பணத்தில் இருந்து கொழும்பிற்கு கருத்தரங்கொன்றிற்கு கலந்து கொள்வதற்காக சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்து போதைப்பொருள்(கஞ்சா) கடத்திச்செல்வதாக குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்தமை தொடர்பாக கருத்துக்கூறும்போதே இதனைத்தெரிவித்தார்.
மேலும் இவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,
குறிப்பாக வடகிழக்கு ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் அரசாங்கம் கூறும் சமாதான காலத்திலும் தொடர்ந்து கொண்டே செல்கின்றதனை தற்போது காணமுடிகின்றது.
ஏற்கனவே யுத்தம் நடைபெற்றகாலத்தில் வெள்ளை வானில் கடத்தியும்,  குண்டுகளை வைத்தும் கொலை செய்தவர்கள் தற்போது கஞ்சாவினை வைத்து ஊடகவியலாளர்களை கைது செய்ய முனைகின்றார்கள்.
இந்த அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது என்று கூறிக் கொண்டே வருகின்றது அ4ரசாங்கம் கூறும் ஊடக சுதந்திரம் என்னவென்றால் ஜனாதிபதியையும், அமைச்சர்களையும் புகழ்ந்து பாடுவதுதான் ஊடக சுதந்திரம் என்று கூறுகின்றது.
நடுநிலையான கருத்துக்களையும் ஒரு நாட்டில் வாழும் இன்னுமொரு இனம் பட்ட அவலங்களையும் அந்த இனம் சார்ந்த ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வரும்போது அதனை தடுப்பதா இந்த நாட்டின் ஊடக சுதந்திரம்.
வடக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் கொழும்பிற்கு சென்றது வெறும் பிறந்தநாள் விழாவிற்கோ, களியாட்ட விழாக்களுக்கோ அல்ல ஊடக தர்மம் சார்ந்த பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளவே இவர்கள் சென்றிருந்தார்கள்.
அவர்களை அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விடக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் குறியாக இருந்தார்கள் அதில் ஒன்று திட்டமிட்ட முறையில் அவர்கள் சென்ற வாகனத்திற்குள் போதைப்பொருளான கஞ்சாவினை வைத்து தடுக்க முற்பட்டமை, மற்றயது ஆர்ப்பாட்டக்காரர்களை ஏவிவிட்டு அதில் கழந்து கொள்ளாமல் தடுத்தமை.
இப்போது யுத்தகாலமாக இருந்திருந்தால் கஞ்சாவினை வைத்ததற்கு பதிலாக குண்டுகளை வைத்திருப்பார்கள் இவ்வாறுதான் திட்டமிட்ட வகையில் ஊடகவியலாளர்கள் காலாகாலமாக அழித்தொழிக்கப்பட்டார்கள்.
இவ்வாறான நிலைமைகளை சர்வதேச நாடுகளும்,  சர்வதேச சமூகமும் புரிந்து கொண்டு உண்மையை கண்டறிந்து வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு துணைபுரிவதோடு இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை இனிமேலும் செய்யாது தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
இந்த நாட்டிலே மூன்று இனமும் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார் ஆனால் தமிழர்கள் சுதந்திரமாக வாழவில்லை என்பதனை தமிழ் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என அரியநேத்திரன் கூறினார்.

0 கருத்துக்கள் :