ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்கா அரசுக்குள் பிளவை ஏற்படுத்தும்

25.7.14

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கைக்கு பதிலளிக்கும் விவகாரம், சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த 5ம் நாள், சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறும், ஐ.நா விசாரணைக் குழுவின் வாய்மொழி அறிக்கை மற்றும், விரிவான அறிக்கையில், சிறிலங்கா அரசின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்காது என்று கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், ஐ.நா விசாரணைக் குழுவின் வாய்மொழி மற்றும் விரிவான அறிக்கை குறித்து பதில் கருத்து வழங்குவதாக இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அதிபர், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையிலான ஆலோசனையின் பின்னரே முடிவெடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
ஐ.நா விசாரணைக் குழுவின் வாய்மொழி அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :