பாலச்சந்திரனின் மரணத்தை மறு விசாரணை செய்யும் வரலாற்றுப் பதிவே “புலிப்பார்வை”

24.7.14

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன் குறித்த திரைப்படம் ஒன்று புலிப்பார்வை என்ற பெயரில் அடுத்த மாதம்  வெளியிடப்பட உள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன். இச்சிறுவன், சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான புகைப்படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
பாலச்சந்திரன் இராணுவ பதுங்குகுழி முகாமில் பிடித்து வைக்கப்பட்டு, பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். இக்கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.
இந்நிலையில், பாலச்சந்திரன் கொலை தொடர்பாக இயக்குநர் பிரவீன் காந்தி, ‘புலிப்பார்வை' என்ற பெயரில் படமொன்றை இயக்கியுள்ளார்.

தனது புலிப்பார்வை படம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரவீன் காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்தாண்டு பெப்ரவரி மாதம் இலங்கை இராணுவத்திடம் சிக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலையான புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
முதல் படத்தில் இராணுவ முகாமில் அமர்ந்து ஏதோ பண்டத்தை அச்சிறுவன் சாப்பிட்டுக் கொண்டிருப்பது போலவும், அதற்கு அடுத்த படத்தில் அச்சிறுவன் சுடப்பட்டு சடலமாகக் கிடப்பது போன்றும் வெளியானது.
மேற்கூறிய இந்தப் புகைப்படங்களை பார்த்த நிமிடம் முதற்கொண்டு எனது மனது வலிக்கத் தொடங்கி விட்டது,. எனக்குள் உண்டான ஆவேசத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கான வேலையில் நான் ஈடுபடத் தொடங்கினேன்.

இராணுவத்தினரிடம் சிக்கிய போதும், கொஞ்சமும் உயிர்ப்பயம் இன்றி அமர்ந்திருந்த அச்சிறுவனின் கண்களில் வீரத்தை நான் பார்த்தேன். எவ்வளவு வீரம் அவனது பார்வையில்.
இது போன்ற சூழலில் சிக்கும் மற்றவர்கள் நிச்சயம் கலங்கிப் போய் தான் இருப்பார்கள். எந்த நொடி உயிர் பறி போகுமோ என்ற பரிதவிப்பில் தொண்டை உலர்ந்து விடும். ஆனால், இந்த சிந்தனைகளின் சுவடே தெரியாமல் அமர்ந்து ஏதோ பண்டத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அச்சிறுவனின் தைரியத்தை என்னவென்று சொல்வது.
அவ்வளவு தைரியமாக அச்சிறுவனை அவனது பெற்றோர் வளர்த்துள்ளனர். எந்த நொடியும் மரணம் சந்திக்கலாம் என்ற தெளிவுடன் வளர்க்கப்பட்டிருக்கிறான் அச்சிறுவன் என்பது அவனது பார்வை மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே, தான் இப்படத்திற்கு புலிப்பார்வை எனப் பெயர் வைத்துள்ளேன். இப்படத்தில் எனது மற்ற முந்தைய படங்களான ஜோடி, ஸ்டார் போன்று நட்சத்திர பட்டாளங்கள் எதுவும் கிடையாது.
பாலச்சந்திரனைப் போன்ற முகச்சாயல் கொண்ட சிறுவனைத் தேடி நாங்கள் சுமார் 100 சிறுவர்களை பரிசீலித்து இறுதியில் சத்ய தேவ் என்ற சிறுவனை தேர்வு செய்தோம். இவன் பார்ப்பதற்கு அப்படியே பாலச்சந்திரனைப் போன்றே காணப்படுகிறான் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், இப்படத்தை ஆவணப்படம் என்றோ அல்லது அப்படியே பாலச்சந்திரன் கதையைப் படமாக்கியிருக்கிறோம் என்றோ தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
இப்படம் நிச்சயமாக உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களிடமும் ஆதரவைப் பெறும். அச்சிறுவனின் மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் அமையும்.
இதை படமாக எடுப்பதற்கு முன், இந்த கதையை சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் சொல்லி இதற்கு அனுமதி வாங்கினேன். நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரவீன் காந்தி.
இப்படம் தொடர்பாக பாலச்சந்திரனாக நடித்திருக்கும் சிறுவன் சத்யா கூறுகையில், ‘இந்த படத்தில் நடிப்பதற்காக எனது பள்ளிக்கு இயக்குனர் நேரில் வந்து என்னை தேர்வு செய்தார். என்னுடன் இன்னொரு சிறுவனையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.
அப்போது, பிரபாரகன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால் இந்த படத்தில் நாம் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. அந்த கதாபாத்திரத்தை நான் நன்றாக செய்திருப்பதாக உணர்கிறேன் என்றான்.
இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பாடல்கள் எழுதி இசையமைக்கவும் செய்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்.

0 கருத்துக்கள் :