சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

23.7.14


பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்த சுப்பிரமணின் சுவாமி,
சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக கூறுவது பிரித்தானியரின் கட்டுக்கதை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் புதுடெல்லி 13 வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினாலும், அதனை நடைமுறைப்படுத்தும் படி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது.
அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி சிறிலங்காவை இலக்கு வைத்து போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பொய்யானது என்றும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 13வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.

புதுடெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
ஒவ்வொருவருக்கும் தமது கருத்தை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது. சுவாமி தனது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுகிறார். நான் சுவாமியுடன் சண்டையிட வேண்டிய தேவையில்லை.
அவரது குழுவினர் என்ன கூறினாலும், ஜனாதிபதி மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எமது பிரச்சினையை பேசியிருக்கிறார் என்பது பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வேயை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும், நோர்வே மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது.

விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது.
ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப்பட்டாலும், நோர்வே எடுத்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :