மதுரை மேலூர் போலீசாரால் சீமான் கைது!

19.7.14

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 17.07.2014 வியாழக்கிழமை காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்துகொண்டு மதுரை திரும்பியுள்ளார். அப்போது அவரது காரும், அவரது ஆதரவாளர்கள் காரும் மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்தது.


அப்போது சுங்கச் சாவடி கட்டணம் செலுத்துவது தொடர்பாக, அங்குள்ள டோல்கேட் ஊழியர்களுக்கும், சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது தகராறாக மாறியது. பிறகு சீமானும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.


இதற்கிடையே சுங்கச் சாவடி மேற்பார்வையாளர் மேலூர் போலீஸ் நிலையம் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர், ‘‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், அவரது ஆதரவாளர்களும் சுங்க கட்டணம் செலுத்தாமல் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். எங்களை தாக்கி காயப்படுத்தினார்கள்’’ என்று கூறி இருந்தார்.


இதன் பேரில் மேலூர் போலீசார் 4 பிரிவுகளில் சீமான் உள்பட 6 பேர் மீது வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து சீமானிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக மேலூர் போலீசார் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சென்னை வந்தனர்.


சீமான் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது சீமான், வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்மொழியை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளை எதிர்த்தும், இந்தி மொழி திணிப்பை கண்டித்தும் பட்டினி போராட்டம் நடத்துவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.


மேலூர் போலீசார் அவரிடம், உங்களை கைது செய்ய வந்துள்ளோம் என்றனர். இந்த தகவல் அறிந்ததும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் சீமான் வீடு முன்பு குவிந்தனர்.


அவர்களுக்கும் மேலூர் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு சீமானை மேலூர் போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை மதுரை அழைத்து சென்றனர்.


மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை முடிந்ததும், மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி முன்பு சீமான் ஆஜர்படுத்தப்படுகிறார்.


இதனிடையே சீமான் கைது பற்றி கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியினர். சுங்கச்சாவடி தகராறுக்கும் சீமானுக்கு தொடர்பில்லை. மோதல் ஏற்பட்டபோது இருதரப்பினரையும் சீமான் சமாதானம் செய்தார். பின்னர் சுங்கக்கட்டணம் எடுத்துக்கொண்டே பயணம் செய்தோம். இது உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்றனர்.

0 கருத்துக்கள் :