புரிந்துணர்வு இல்லாதோரே மோதல்களில் ஈடுபடுகின்றனர்

1.7.14

சமூகம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமல் வாழ்பவர்களே இன மற்றும் மத ரீதியாக மோதல்களில் ஈடுபடுகின்றனர் என பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்துள்ளார்.


 அண்மையில் பிறந்த தினத்தை கொண்டாடிய பிரதமருக்கு நல்லாசி வேண்டி பௌத்தசாசன மத விவகார அமைச்சு மற்றும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத கலாசார திணைக்களங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

சிறிய பிரச்சினைகளுக்காக மனிதர்கள் மோதல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூகத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புகளும் நாட்டுக்கு களங்கமும் ஏற்படுகின்றது.

உலகில் அநேகமான நாடுகளில் பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். அது போலவே எமது நாட்டிலும் ஐந்து இனத்தவர்கள் வாழ்கின்றனர். சில நேரங்களில் ஒரு சிலரின் தேவையற்ற செயற்பாடுகளால் அந்த இனத்தவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. எனினும், அவ்வாறு மோதல்களை ஏற்படுத்துபவர்கள் ஆன்மிக சிந்தனையற்ற கீழ்த்தரமானவர்கள் என நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அரசியலமைப்பில் கூறப்பட்டதன் பிரகாரம் பௌத்த சாசனம் மற்றும் பௌத்த தர்மத்தினை போஷித்து பாதுகாப்பதற்கு எமது உயிரை பணயம் வைத்தேனும் நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அதுபோலவே ஏனைய மதத்தவர்களுக்கும் கௌரவமளித்து அவற்றையும் சமமாக மதித்து பாதுகாப்பதற்கும் எமது அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சகல இனத்தவர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான வைபவமொன்றினை ஏற்பாடு செய்தமைக்காக நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையர் எனும் அடிப்படையில் நாம் அனைவரும் நட்புறவுடன் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கியவாறு வாழ வேண்டும். அதற்கு உகந்த சூழலை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித்தந்துள்ளார் என்றார்.

0 கருத்துக்கள் :